செவ்வாய், 27 மார்ச், 2012

கரண்ட் கட்!!

கரண்ட் கட்!!

ஜெனரேட்டர் ஆட்சியில்
ஜெ முதல் மந்திரி


மின்மினி வெளிசத்தை
நகர குழந்தைகள் ரசிக்க செய்யும்

நிலவின் ஒளியை
மீண்டும் கவனிக்க செய்யும்

உழைக்காதவரையும்

வியர்வை சிந்தவைக்கும்


படித்தவரை

புத்தகம் மறக்க செய்யும்

21 ஆம் நூற்றாண்டிலும்
கற்காலம் தலை காட்ட வைக்கும்

ஆனால்

டாஸ்மாக் பக்கம் மட்டும்
கூட்டம் குறைக்க தடுமாறும்
:-)

தமிழக அரசின் இப்போதைய இரண்டு கண்கள் -  டாஸ்மாக் , மின்சாரம்






கரண்ட் கட்!! 


அம்மாக்களுக்கு கிரிகெட்டிலிருந்தும்
அப்பாக்களுக்கு மெகா தொடரிலிருந்தும்
பிள்ளைகளுக்கு செய்திகளிலிருந்தும்
விடுதலை !




திங்கள், 19 மார்ச், 2012

பிரதமருக்கு ஒரு கடிதம் - தமிழருவி மணியன்


பிரதமருக்கு ஒரு கடிதம் - தமிழருவி மணியன்

அன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்பு​மிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு... வணக்கம்!

இந்திய ஜனநாயகம் இந்த எளிய​வனுக்​கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்​படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன்.

தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்​டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர்கள். ஒன்றுபடுவது ஞானம், வேறுபடுவது அஞ்ஞானம் என்ற வாழ்வியல் விழுமியத்தை, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற வேத வாசகத்தின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர்கள். இந்தியாவின் ஓர் அங்கமாக இவர்கள் இருப்பதே இந்த மண்ணின் மகத்தான பெருமை என்பதை மத்திய அரசுக்குத் தலைமை ஏற்றிருக்கும் நீங்கள் முதலில் உணர வேண்டும்.

எங்கள் போற்றுதலுக்குரிய பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று குரல் கொடுத்தார். நாங்கள் செவிசாய்க்கவில்லை. அன்பிற்கினிய அண்ணா, 'திண் ணையில் அமர்ந்தாவது திராவிட நாடு கேட்பேன்’ என்று மேடைதோறும் முழங்கினார். அவரை நாங்கள் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தோம். ஆனால், அவருடைய பிரிவினைக் கோரிக்கையை நிரா கரித்தோம். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், 'சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தமிழரசு காண்போம்’ என்று எங்கள் கைகளைப் பிடித்து வேண்டினார். தேசிய மயக்கத்தில் இருக்கும் நாங்கள் அவரைத் திரும்பிப் பார்க்கவும் மறுத்தோம். இன்றும், 'தமிழ்த் தேசியம்’ பேசுபவர்களை நாங்கள் பெரிதாக ஆதரித்து விடுவது இல்லை. இன்றுவரை இந்தியராய் இருப்பதற்கு நாங்கள் கொடுத்திருக்கும் விலை மிக அதிகம். ஆனால், இறுதிவரை நாங்கள் இந்தியராய் நீடிப்பது இனி உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்ஆப்பிரிக்காவில் மகாத்மா​வாக மலர்ந்ததற்கு முதற்காரணம் தமிழர்கள். 'அடுத்த பிறவியில் வள்ளுவத்தை வாசிப்பதற்காகத் தமிழனாய்ப் பிறக்க விரும்புகிறேன்’ என்றார். இந்தியாவைவிட்டு வெளியேறி அந்நிய மண்ணில் வெள்ளையருக்கு எதிராக நேதாஜி படை திரட்டியபோது, அவருக்குப் பின்னால் வெள்ளமெனத் திரண்​டவர்கள் தமிழர்கள். அதனால்தான், 'இன்னொரு பிறவி இருந்தால் தமிழனாய்ப் பிறக்கும் வரம் எனக்கு வாய்க்க வேண்டும்’ என்றார் அந்த வீரத்தின் விளைநிலம். ஆனால், உங்கள் அரசோ தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவதையே ஆட் சிச் சாதனையாக அரங்கேற்றி வருகிறது.

விடுதலை வேள்வியில் நாட்டு மக்கள் ஈடுபட்டி​ருந்தபோது, மாநில உரிமைகள் பற்றி ஆயிரம் வாக் குறுதிகளை அன்றைய காங்கிரஸ் தலைமை அள்ளி வழங்கியது. 'ஒவ்வொரு மாநிலமும் பரிபூரண சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். மாநிலங்கள் விரும்பி விட்டுக்கொடுக்கும் அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும்’ என்று இடை விடாமல் வலியுறுத்தினார் மகாத்மா. புதுடெல்​லி யில் 2.4.1942 அன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு, 'ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களை அவர்களுடைய விருப்பத்துக்கு எதிராக இந்திய ஒன்றியத்தில் இருக்கும்படி வற்புறுத்த விரும்பவில்லை’ என்று தீர்மானம் தீட்டியது. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களை மாண்புமிகு மாநகராட்சிகளாக மாற்றிவிட்டது. இந்தியராய் இருப்பதற்கு எங்கள் உரிமைகளை இழந்து நின்றோம். எதிர்த்துப் போர்க்கொடி பிடிக்கவில்லை.

சுதந்திர இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தெலுங்கர்கள் 'விசால ஆந்திரா’ வேண்டும் என்றனர்; கன்னடர் 'சம்யுக்த கர்னாடகா’ என்று குரல் கொடுத்தனர். மலையாளிகள் 'ஐக்கிய கேரளா’ என்ற கோரிக்கை வைத்தனர். இந்தியராய் இருக்க விரும்பிய நாங்களோ அகன்ற தமிழகத்துக்கு ஆசைப்படவில்லை. சித்தூர், புத்தூர், திருப்பதி, திருக்காளத்தி ஆகிய தமிழர் பகுதிகளைத் தெலுங்கருக்குத் தாரை வார்த்தோம். மாதேசுவரன் மலை முதல் நந்திமலை வரை வாழ்ந்த நிலப் பரப்பையும், பெங்களூரு முதல் தங்கவயல் வரை சொந்தமான தமிழர் மண்ணையும் எங்கள் கன்னட சகோதரர்களுக்குச் சீதனமாகத் தந்து மகிழ்ந்தோம். ஏராளமான ஆறுகள் பெருக்கெடுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை, 'குளமாவது? மேடாவது? எல்லாம் இந்தியாவில்தானே இருக்கின்றன’ என்று தேசியத் தத்துவம் பேசி மலையாளிகளுக்கு 'மொய்’ எழுதிவிட்டு, இன்று முல்லை - பெரியாறு அணைக்காக அழுது​கொண்டு இருக்கிறோம். பிரதமரே... இவ்வளவு இழப்புகளும் எதற்காக? இந்தியராய் தமிழர் இருப்பதற்காக!

பிரிட்டனின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டு 1948 பிப்ர வரியில் சுதந்திரம் அடைந்து ஆறு மாதங்கள் ஆவதற்கு முன்பே காடாய், மேடாய், களர்நிலமாய் இருந்த மத்திய மேட்டு நிலத்தை ரப்பர், காபி, தேயிலைத் தோட்டங்களாக மாற்றி இலங்கையின் பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்குத் தங்கள் வியர் வையை, ரத்தத்தைச் சிந்திய எங்கள் தாயகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து, ஆதரவற்ற அனாதைகளாக்க முதல்பிரதமர் டி.எஸ்.சேனநாயகா மூன்று மசோதாக்களை இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க முயன்றபோது, நேருவின் மத்திய அரசு மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. மலையகத் தமிழர்களின் உரிமை காக்க 1939-ல் 'இலங்கை இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்து வைத்ததே நேருதான் என்பது எவ்வளவு பெரிய இயற்கை முரண்!

விடுதலை பெறுவதற்கு முன், இலங்கை நாடாளு​மன்றத்தில் எட்டு உறுப்பினர்களையும், 'செனட்’ எனப்படும் மூத்தோர் அவையில் இரண்டு உறுப் பினர்களையும் பெற்றிருந்த இந்தியத் தமிழர்கள், ஒரு நொடியில் நாடற்றவர்களாக ஆக்கப்​பட்டனர். இந்த அநீதியை எதிர்க்காமல், அவர்களை அகதிகளாக்க 1964-ல் சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தத்தை இந்திய அரசு அங்கீகரித்து, ஐந்து லட்சம் தமிழர்களைத் திரும்ப அழைத்து நடுத்தெருவில் நிறுத்தி நிலைகுலையச் செய்த போதும், நாங்கள் ஈர விழிகளுடன் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம், 'இந்தியர்’ என்ற மகுடத்தை இழந்து விடாமல் இருக்க!

தமிழகத்தின் தென்பரப்பில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள கச்சத்தீவு எங்க ளுக்குச் சொந்தமானது. பல நூற்றாண்டுகளாக ஒரு தேசியஇனத்துக்குச் சொந்தமான நிலப்பரப்பை, அந்த இனத்தின் அனுமதி இன்றிப் பக்கத்து நாட் டுக்குப் பரிசாய் வழங்கும் பாதகச் செயலை எந்த அரசும் செய்யத் துணியாது. ஆனால், இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி தன்னுடைய சீதனப்பொருளை அடுத்தவருக்குத் தருவது போல் திருமதி பண்டாரநாயகாவிடம் 1974-ல் கச்சத்தீவை ஒப்படைத்தது எந்த வகையில் நியாயம்?

காங்கிரஸை 1969-ல் தன் சுயநலத்துக்காக இரண்​டாகப் பிளந்த இந்திரா காந்தியின் குடும்ப அரசியலை, அன்று தொட்டு எதிர்த்த கூட்டத்தில் நான் ஒருவன். இந்திரா காந்தியின் எந்த அரசியல் நிலைப் பாட்டையும் ஏற்றவன் இல்லை நான். உலகின் மீன் வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான கச்சத்தீவை நேருவின் மகள் சட்ட வரம்பை மீறி இலங்கையிடம் சமர்ப்பித்​த போதும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு நிறுத்திக் கொண்டோம். ஏன்..? இந்தியராய் இருப்பதற்கு!

இந்தியப் பிரதமரே... உலகில் உள்ள கடற்கரை நாடுகள் அனைத்திலும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது உண்டு. எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று சொல்லி எந்த நாட்டுக் கடற்படையும் மீன​வரைச் சுடுவது இல்லை. நம் பகை நாடான பாகிஸ்தான்கூட, குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராப் பகுதியில் மீன்பிடிக்கும் இந்தியரை எல்லை தாண்டியதாக ஒரு முறையும் சுட்டது இல்லை. ஒருவரையும் கொன்றது இல்லை. உலகிலேயே மீனவரைச் சுட்டுக் கொல்லும் ஈனச் செயலை இலங்கை மட்டும்தான் இன்று வரை செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழகத்து மீனவரை - அதாவது நம் 'இந்திய’ மீனவரை ஊனப்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களின் - அதாவது 'இந்திய’ மீனவர்களின் உயிர் குடித்த இலங்கை அரசுக்கு வெண்சாமரம் வீசும் வேலையில் உங்கள் அரசு ஆனந்தம் அடைவதைப் பார்த்தும் நாங்கள் ஆத்திரப்படவில்லை. 'தேசியஉணர்வு’ எங்களைத் தேம்பி அழச் செய்வதோடு தடுத்து விடுகிறது; எங்கள் முதல்வர்களை உங்களுக்குக் கடிதம் எழுதுவதோடு நிறுத்தி விடுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்கள் உயர் தமிழுக்கு வட்டார மொழிக்குரிய தகுதியைத்தான் தந்திருக்கிறது. 'இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட மொழியே உயர்தனிச் செம்மொழி’ என்று மொழியியல் அறிஞர்கள் வைத்திருக்கும் வரையறையைப் புறந்தள்ளி, எங்கள் தமிழோடு கன்னடமும் தெலுங்கும்கூட 'உயர் தனிச் செம்மொழிகள்’ என்று அங்கீகரித்திருக்கும் உங்கள் 'அரசியல்’ நியாயமானது என்று எந்த நேர்மை யாளரும் ஏற்க முடியாது.

இந்தியைப் போன்று தமிழும் தேசத்தின் ஆட்சி மொழி அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று மதுரை ஒத்தக்கடை வீதியில் நாங்கள் ஓங்கிக் குரல் கொடுப்பதற்கு மேல் எதையும் செய்ய மாட்டோம். எங்களுக்குத் தமிழா முக்கியம்? 'இந்தியர்’ என்ற அடையாளம் அல்லவா அதிமுக்கியம்!

போகட்டும். இந்தியராய் இருப்பதற்கு இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்து விட்டோம். எங்கள் இனம் ஈழத்தில் அழிவதற்கு இலங்கை அரக்கரிடம் ஆயுதம் அளித்தீர்களே... அதைப் பொறுத்தோம். முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர் பலியிடப்பட்ட போதும் ராஜபக்ஷேவுக்கு டெல்லியில் 'ரத்தினக் கம்பள வரவேற்பு’ வழங்கி ரசித்தீர்களே... அதையும் பொறுத்தோம். முள்வேலிக் கம்பிகளுக்கிடையில் மூன்று லட்சம் தமிழர் முடக்கப் பட்டபோது, இலங்கை அரக்க அரசுக்கு 1,000 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துக் கொலைகாரக் கூட்டத்தையே மறுவாழ்வு தரும்படி வேண்டி நின்றீர்களே... அதையும் பொறுத்தோம்.

'உயிரினும் சிறந்தன்று கற்பு’ என்று போற்றி வாழ்ந்த எம் குலப் பெண்களைச் சிங்களர் வன்புணர்ச்சி செய்து வதைத்த செய்தி வந்ததே... அதையும் பொறுத்தோம். பிரிட்டனின் 4-வது சேனலில், எம் இனத்தவரை எட்டி உதைத்து, கைகளைப் பின்னால் கட்டி, கண்களைத் துணியில் மறைத்துச் சுட்டு வீழ்த்திய மனிதகுல அநாகரிகத்தைக் கண்டபோதும் பொறுத்துக்கொண்டோம். இன்​னமும் பொறுப்பதற்கு என்ன இருக்கிறது பிரதமரே?

தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று 24 நாடுகளின் ஆதரவோடு ஐ.நா-வில் சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானத்தை முறியடிக்க இந்திய அரசு முனைந்தது நியாயந்தானா? இன்று, ஜெனிவாவில் மனித உரிமைகள் அமைப்பின் முன் இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை உங்கள் அரசு ஆதரிக்கத் தயங்குவது நாகரிக அரசின் நல்ல​ அடையாளமா? அபிசீனீயா மீது ஆக்கிரமிப்பு நடத்தி​யதற்காக, ரோமாபுரியில் விமானத்தில் வீற்றிருந்த நேருவை விருந்தோம்ப வருந்தி அழைத்த முசோலினியைச் சந்திக்க மறுத்த ஆசியஜோதி அமர்ந்து ஆட்சி நடத்திய நாற்காலியில் நீங்கள் அமர்ந்து இருப்பதை மறந்து விட்டீர்களா?

ஈழப்போரில் இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து பிரிட்டன் குரல் கொடுக்கும் என்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தது உங்கள் செவிகளில் சேரவில்லையா? 'சேனல் 4 ஒளிப்பதிவைக் கண்டு உறைந்து போய்விட்டேன்’ என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் சொன்னது உங்கள் சிந்தையில் பதியவில்லையா?  ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்​தின் கண்டனம் உங்கள் கண்களில் படவில்லையா?

மாண்புமிகு பிரதமரே... உங்கள் மனச்சான்றோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள். காஷ்மீர் தீவிரவாதி களை அழிக்க இந்திய ராணுவம் என்றாவது விமானத் தாக்குதல் நடத்தியது உண்டா? 'ஈழத் தமிழரும் இலங்கை மக்களே’ என்று சொல்லும் ராஜபக்ஷே அரசு சொந்த மக்கள் மீதே வான் வழியாக ரசாயனக் குண்டுகளைப் பொழிந்து பல்லாயிரவரைப் படுகொலை செய்தது மனித உரிமை மீறல் இல்லையா? இன அழிப்பு இல்லையா? சர்வதேசப் போர் விதிமீறல் இல்லையா? எந்த நாட்டுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டுவருவது இந்திய மரபு இல்லை என்று சொல்லி இந்த மண்ணின் பண்பாட்டுப் பெருமையைப் படுகுழியில் தள்ள எப்படி உங்கள் அரசுக்கு மனம் வந்தது?

'தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்’ என்றார் பெரியார். உண்மைதான். முல்லை-பெரியாறு, காவிரி, பாலாறு என்று எந்தப் பிரச்னையிலும் தமிழர் உரிமை நிலைத்திட 'இந்தியன்’ என்ற உணர்வு இதுவரை உதவவில்லை. 'ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தால், மம்தாவுக்கு அள்ளிக் கொடுப்போம். சாமரம் வீசவில்லை என்றால், 'தானே’ புயல் அழிவுக்கும் கிள்ளியே கொடுப்போம்’ என்று ஓரவஞ்சனையோடு நடக்கும் நியாயமற்ற உங்கள் அரசு எங்களுக்கு எதற்கு?

கட்சி ரீதியாக நாங்கள் பிரிந்துகிடந்ததுவரை எங்களை உங்களால் எளிதில் புறக்கணிக்க

முடிந்தது. இன்று உலகின் எட்டாவது அதிசயமாய் முதல்வர் ஜெயலலிதாவும், கலைஞரும், காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஈழத் தமிழரின் இன்னல் தீர்க்க ஒன்றுபட்டு நிற்கின்றனர். இலங் கைக்கு ஆதரவாக இந்திய அரசு இனி இருந்தால், தமிழ் நிலத்தில் காங்கிரஸ் கல்லறைக்குச் சென்று விடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் என்று சரித்திரம் படைத்த உங்களுக்கு அதுகுறித்துக் கவலைப்பட நேரம் இருக்காது. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலைப்பட்டாக வேண்டும்.

இந்தியஅரசு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து எங்களை முதலில் தமிழராகவும், முடிவில் இந்தியராகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் நம்பிக்கைக்குரிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழில் தீட்டப்பட்ட என் கடிதத்தின் சாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உங்களுக்குச் சொல்வார் என்று நம்புகிறேன்.

இனஉணர்வை மதித்து என்னை இந்தியனாக இருக்க விடுவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்​கையுடன்,

தமிழருவி மணியன்


சனி, 21 ஜனவரி, 2012

3

உயிரே.. உயிரே
உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய்
இல்லையடி!!

அழகே அழகே..
உனை விட எதுவும்..
அழகில் அழகாய்..
இல்லையடி !!




ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பொங்கல்??




ஒவ்வொரு நொடியும்.
கரும்பைப் போல் இனித்திட
கதிரவன் போல் ஒளிர்ந்திட
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..


இந்நாள்..

தினம் முன் விழித்து நம்மை எழுப்பும்
கதிரவனை முதுகில் தட்டிக்கொடுக்கும் நாள்

"தானே" கடந்து, தன் கடன் மறந்து, ஒரு நாள்
தன் கண்ணீர் மறக்க நினைக்கும் உழவர் திருநாள்

உண்ணும் உணவின் கதை விதைத்து
காணாமல் போகும் இவர்களை தேடும் நாள்

"உலக தொலைக்காட்சியில் முதன்முறை"யாக
பல வரலாற்றுகளை உருவாக்கும் நாள்..


சினிமா நடிகர்களும்,சாலமன் பாப்பையாவும்,  
மட்டும் நம் உறவுகளான நாள்


நகர தீப்பெட்டி வீடுகளில் இன்டெக்ஷன் அடுப்பகளில்
குக்கர் திருநாள்

தமிழ் புத்தாண்டின் முதல் நாளா? இல்லையா?
என்ற குழப்பத்தை அரசியலாக்கும் நாள்

தமிழக அரசை வாழவைக்கும் டாஸ்மாக் கடைகளில்
குடிக்காரத் தமிழனின் தன்மான திருநாள்

இவை எதையும் யோசிக்காத , யோசிக்க நேரமில்லாத
இயந்திர வாழ்க்கையில் காரணம் மறந்து,
விடுமுறையாக மட்டும் பதிவான மற்றுமொரு நாள்!!

சனி, 14 ஜனவரி, 2012

ஜருகண்டி



கோவில்
தன்னை சுற்றி உள்ள கடவுளை...
கூண்டுக்குள் வைத்து அழகு பார்க்க.
மனிதனின் யுக்தி..  

கோவில்
மனிதனிடமிருந்து.. தன்னை காத்துக்கொள்ள.. 
இறை.. தேடிய.. தனிமை அறை

திருப்பதி கோவிலில்
அர்ச்சனை அபிஷேகங்களை விட.. 
கடவுள் அதிகம் கேட்கும் வார்த்தை 
"ஜருகண்டி"   !!

மனிதர்கள்
சிலர்..
கடவுள் முன் மட்டும் உத்தமனாய் நடித்து, 
பொருள் கொடுத்து வரம் தேடும் ..வியாபாரிகள்
சிலர்...
கடவுளின் முன் பாவங்கள் என்பதே இல்லை 
என்ற நம்பிக்கை உடைய.. பாவிகள்
சிலர்..
கடவுள்களையும் பாவங்களையும்... மனதில்.
சுமக்கும்.. உத்தமர்கள்...
பலர்..
கடவுள், பாவம், சக மனிதர்கள் - இவை எவற்றையும்..
கண்டு கொள்ளாத இயந்திரங்கள்...



ஞாயிறு, 11 டிசம்பர், 2011

கண்ணாடி. .முன்னாடி.. எது??




ஒவ்வொரு முறையும்
கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது தோன்றுவது !!!

என்னை போல் தோற்றம் கொண்டு கண்ணாடி உலகில் வாழ்பவன் நிஜமா?
நான் அவனது பிம்பமா? யார் நிஜம் - யார் பிம்பம்??

முகம் பார்க்க தோன்றும் போது மட்டும் நாங்கள் சந்தித்துக்கொள்வது ஏன்?

திடீரென ஒரு நாள்,  எங்களில் ஒருவர் கண்ணாடி முன் / பின் தோன்றாவிட்டால் மற்றவரின் நிலை தான் என்ன??

ஒருவேளை எங்களில் ஒருவர் அழகாய் இருந்து மற்றொருவர் அழகற்றவராய் இருந்திருந்தால், இருவரின் வாழ்க்கை தான் எப்படி மாறியிருக்கும்??
பொய் என்னும் உலகிலேயே வாழ்ந்து இருப்போம் இருவரும்...

நாம் தினம் தினம் முகம் பார்த்து ரசிக்கும் கண்ணாடிகள்...
வேறு உலகின்... கதவுகளாகவும்.... ஜன்னல்களாகவும்..இருந்திருந்தால்???..

நிஜம்..
பிம்பம்...
எது நான்?
கண்ணாடி. .முன்னாடி.. எது??

திங்கள், 24 அக்டோபர், 2011

நிழல்

நான்:

காலை முதல் மாலை வரை
சில நேரம் என்னை பின் தொடர்ந்து.....
சில நேரம் என்னை வழி நடத்தி....
ஒரு பொழுதும் என்னை விட்டு பிரியா ... என் நிழல்..நண்பா..
இரவில் மட்டும் ... நீ எங்கே ?

நிழல்:

நாள் முழுதும்.... உன் உருவத்தில்.. அடைப்பட்ட நான்...
பரந்து ...விரிந்தேன்..
உனக்கு இரவை கொடுத்தேன்....

நாள் முழுதும்... நான் உன் காலடியில்..
இரவு.. முழுதும்... நீ என் காலடியில்...

சனி, 22 அக்டோபர், 2011

உனக்கென மட்டும்

உனக்கென மட்டும் கண்கள் விழித்ததடி.
உனக்கென மட்டும் வார்த்தை தொலைந்ததடி..
உனக்கென மட்டும் வாழ்க்கை ருசித்ததடி..
ஆம்..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி,

இன்னும்...... மயக்கம் என்ன?




திங்கள், 17 அக்டோபர், 2011

கூரை , நான் , கொசு வலை


ஓர் கூரை
ஓர் கூரையின் கீழ் வாழ்வதென்பதன் 
உண்மையான அர்த்தம்...

கவலையில்லை 
வீட்டை பூட்டினோமா என்ற கவலையில்லை..
மாடியில் காய வைத்த வத்தல் கவலையில்லை...
எடுக்க மறந்த குடை கவலையில்லை...

என் கவலை .... 
இந்த மழை முடியும் வரை... என் கூரை தாங்குமா?
என் கவலை...
இந்த மழை முடியும் வரை... என் குடும்பம் பசி தாங்குமா?




மற்றும் நான்
நாளை சைக்கிள் ஓட்டத் தேவையானவை
சைக்கிள் மற்றும் உயிருடன் நான்!!

சொத்து
என் தாத்தா விட்டு சென்ற ஓரே சொத்து...
என் தாத்தாவிடம் கூட்டி செல்கிறது..


என் வீடு
என் வீட்டுச் சுவர்களை நான் பார்த்தில்லை...
என் வீட்டு நட்சத்திர கூரையை தொட்டதில்லை...
இவ்வளவு பெரிய வீடு இருந்தும்...
கொசு வலை கட்டும் போது மட்டும் சற்று சிரமப்படுகிறேன்...

கொசு வலை
தினம் தினம் பல நூறு கொசுக்கள்
தங்கள் குழந்தைகளை கூட்டி செல்லும்..
மனிதக்காட்சி சாலை....


கொசு வலை
இரையே வலை விரிக்கும் விசித்திரம்


புதன், 12 அக்டோபர், 2011

இரவில்லா நாட்கள்

கனவு ஏது
உறக்கம் ஏது..
ஓய்வு ஏது...

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

ஓட்டம் உண்டு
ஏக்கம் உண்டு..
கோபம் உண்டு...

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

தான் மட்டும்..
பணம் மட்டும்
பொய் மட்டும்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

வலி கொஞ்சம்..
பழி கொஞ்சம்
பாவம் கொஞ்சம்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

நிலவு வேண்டும்..
குளிர்க்காற்று வேண்டும்
இருளும் வேண்டும்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

போதும் ... போதாது

போதாது என்றால் ...
எதுவும் போதாது தான்..

போதும்.. என்றால்
செலவுகள் குறையும்
கனவுகள் மறையும்..
ஏக்கங்கள் தீரும்...
நிம்மதி வளரும்...
வாழ்க்கை ஓரிடத்தில் நின்றபடி ஓடும்...

போதும் என்பதா.... போதாது என்பதா??
இந்த குழப்பம் தான் - மனிதனோ??



ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

மாற்றம்

"நீ சுத்தமா மாறிட்ட"
இது பாராட்டா? அல்லது விமர்சனமா?

நாம்..
உருவத்தில், செயலில் , சிந்தனையில்...
மாற்றத்தை ஏற்க மறுப்பது ஏன்?

தன்னுடைய மாற்றத்தை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளும் மனிதன்..
தன்னை சுற்றி உள்ள மனிதரின்
மாற்றத்தை ஏற்க மறுப்பது ஏன்?

இது எப்படி இருந்தாலும்...
மாற்றம் ஏற்க மறுக்கும்
மனிதனின் விசித்திரமும் மாறும்,

மாற்றம் ஒன்றே நிரந்திரம்..

புதன், 22 ஜூன், 2011

வாழ்க்கையெனும் சாலை

வாழ்க்கையெனும் சாலையில் 
முயற்சிகள் எல்லாம் மைல்கற்கள்
வெற்றியும் தோல்வியும் திசைக்காட்டிகள்
இலக்கு ?
திசைக்காட்டிகள் முடிவு செய்யும் சிலருக்கு
மைல்கற்கள் முடிவு செய்யும் சிலருக்கு...

திசைகளும் மைல்களும் மறந்து 
போகும் சாலை எதுவாயினும்
விபத்துகளின்றி போனால் போதும் 
என்ற எண்ணமே பலருக்கு....  :-)

திங்கள், 20 ஜூன், 2011

ஒன்றினுள் ஒன்று

தூக்கம்
தினம் தினம் .. சுகம்
நிரந்தரமானால்... சோகம்..


கனவு
உழைப்பாளியின் வரம்
சோம்பேறியின் சாபம்


வரம்
வாழ்க்கை புரிந்தவனுக்கு மகுடம்,
வாழ்க்கை தொலைத்தவனுக்கு பாரம்


சாபம்
நிரந்தர தூக்கத்தை எண்ணி,
இன்று சுவாசிக்க மறக்கடிக்கும் எண்ணம்..


பயம்
எண்ணங்கள் புவி அளவு படர
புவியின் பாரத்தை மனதில் சுமக்க
பாரமே எண்ணங்களாகி
பின், வாழ்க்கையே பாரமாகும் - பயம்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

புதிய முயற்சிகள்


சனி, 5 மார்ச், 2011

கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கடிதம்

விகடனில் இந்த வாரம் .........

கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கடிதம்...

ண்பா... 'பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம், பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்....’ என மதுஸ்ரீ குரலில் இழையும் பாடல் எனக்கும் பிடிக்கும் நண்பா. ஆனால், 'பஸ் டே’ கொண்டாட்டம் என்ற பெயரில் சென்னை கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் அராஜகம் பேருந்துப் பயணத்தையே திகில் அனுபவமாக மாற்றி இருப்பது கொடுமை. நீங்கள் நடத்தும் 'பஸ் டே’ கொண்டாட்ட ரகளைகளால்... சுற்றியிருக்கும் எல்லோருக்கும் அந்த நாள், ஆயுளுக்கும் மறக்க முடியாத வடுவாக மாறுவதை அறிவீர்களா?

இந்த 'பஸ் டே’ கலாசாரம் முதலில் எப்படி வந்தது நண்பா? கல்லூரி வந்து செல்ல பெரும்பாலான மாணவர்களுக்கு பேருந்து மட்டுமே வாகனமாக இருந்த காலத்தில், அந்தப் பயணம் அனைவருக்கும் மிக இனிய நினைவுகளை வழங்கியது. சில கிலோ மீட்டர் பயணத்தில் எத்தனை எத்தனை நட்புகள், காதல்கள். பேச்சும், சிரிப்பும், பாட்டும், கும்மாளமுமாக அந்த இளமையின் துள்ளலை மற்ற பயணிகளும் ஏக்கத்துடன் ரசித்தனர். இப்படி ரம்மியமான நினைவுகளை வழங்கிய பேருந்துக்கு மரியாதை செய்யும் விதமாகவே பஸ் டே கொண்டாட்டங்கள் தொடங்கின. ஆனால் நண்பா, அண்மை வருடத்தைய நிகழ்வுகள் அப்படி இனிமை நினைவுகளையா தருகின்றன?
வாகனங்கள் நகர்ந்து செல்லும் மாநகரச் சாலைகளில் பெருங்கூட்டமாகத் திரண்டு பேருந்தின் மீது ஏறி உற்சாகம் பொங்க நீங்கள் வருகிறீர்கள். அலங்கரிக்கப்பட்ட தேர்போல, அந்த நகரப் பேருந்து போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து வருகிறது. வெளியில் சாலை நடுவே விசில் சத்தமும், கூச்சலும், பாட்டும், ஆட்டமும் தூள் பறக்கிறது. சுற்றியிருக்கும் யார் பற்றியும் உங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் நண்பா, அந்த பேருந்தை ஓட்டிவரும் ஓட்டுநருக்கு கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகனோ, மகளோ இருக்கக்கூடும். டிராஃபிக்கில் சிக்கித் தவிப் பவர்களில் உங்கள் அப்பாவின், அம்மாவின் சாயலில் ஆயிரம் பேர் இருப்பார்கள். உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் உங்கள் முகங்களில் தங்கள் பிள்ளைகளின் சாயல்களையே காண்கிறார்கள் நண்பா. எங்கெங்கோ படித்துக்கொண்டு இருக்கும் மகள்/மகன்களின் முகங்கள் கவலையோடு அவர்களின் மனங்களில் வந்து போகும். அன்று இரவு அவர்களுக்கு உறக்கம் வராது நண்பா! அதே டிராஃபிக் நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் நிற்கும் கூட்டத்தில் பீட்ஸா கார்னரில் வேலை பார்க்கும் இளைஞர்களும் உண்டு. அவர்களில் பலர், பகலில் பீட்ஸா டெலிவரி செய்து மாலைக் கல்லூரிகளில் படிப்பவர்கள். ஐந்து நிமிட தாமதத்தில் அவர்களின் ஒருநாள் சம்பளம் கானல் நீராகும் வேதனை உங்களுக்குப் புரியுமா நண்பா?
கல்லூரிப் பருவம் கொண்டாட்டங்கள் நிறைந்தது, கொண்டாடப்பட வேண்டியது. அன்றாட வாழ்க்கையே கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். ஏனெனில், ஒவ்வொரு நாளும் புதிய புதிய நெருக்கடிகள் நம்மைச் சூழ் கின்றன. அவற்றைக் கண்ணீரால், கோபத்தால் எதிர்கொள்வதைக் காட்டிலும்... கொண்டாட்டத்தால் எதிர்கொள்வதே சிறந்த வழி. ஆனால் நண்பா, நமது கொண்டாட்டம் என்பது சுற்றிஇருப்பவர்களுக்குத் துன்பங்களைப் பரிசளிக்கலாமா? அடுத்தவர்களைத் தொந்தரவு செய்து, அவர்களின் வேலைகளைக் கெடுத்து, நடு ரோட்டில் நிற்கவைத்து, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? 'முடியும்’ எனில், அது ஆரோக்கியமான மனநிலையா? பிறரை இம்சித்து இன்பம் காண்பது மன நோய்க்கான ஆரம்ப அறிகுறி அல்லவா?
அண்மையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பஸ் டே கொண்டாட்டம் பெரும் கலவரமாக முடிந்ததை அறிவாய் நண்பா. காவலுக்கு வந்த காவலர்கள் மீது கற்கள் எறிந்து காயப்படுத்தி இருக்கிறார்கள் மாணவர்களின் மாண்பு உணராத சிலர். கல்லூரி வளாகம் எங்கும் கற்களும், கட்டைகளும், செருப்புகளும் சிதறிக்கிடக்கின்றன. 'ஸ்டூடன்ட் பவர்னா என்னன்னு தெரியுமா?’ எனப் பல சினிமாக்களில் நாம் வீர வசனங்கள் கேட்டிருக்கிறோம். இதுதானா அந்த ஸ்டூடன்ட் பவர்? இப்படி ஒரு ஸ்டூடன்ட் பவர் நமக்கு அவசியமா நண்பா?
உண்மையில் 'மாணவர் சக்தி’ என்பதற்கு அண்மைக் கால உதாரணம், ஆந்திராவின் உஸ்மானியப் பல்கலைக்கழக மாணவர்கள்! பல வருடங்களாக நீடித்து வரும் ஆந்திரா - தெலுங்கானா போராட்டம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் குறிப்பிடத்தகுந்த பங்களிப் பைச் செலுத்திய உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வருடம் மிகத் தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். எதற்கும் அஞ்சவில்லை, விட்டுக்கொடுக்கவில்லை. இறுதியில் மத்திய அரசு தனித் தெலுங்கானா அறிவிப்பை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்போது அந்த அறிவிப்பை செயல்படுத்தக் கோரி போராடுவதும் அதே மாணவர்கள்தான் நண்பா. இதன் பொருட்டு அவர்கள் போலீஸின் அடக்குமுறைகளை நடு வீதிக்கு வந்து நேருக்கு நேர் எதிர்கொள்கின்றனர். ஆனால், நீங்கள் செய்வது என்ன நண்பா? பாதுகாப்புக்கு வரும் போலீஸ் மீது கல் எறிந்துவிட்டு, கல்லூரி வளாகத்துக்குள் ஓடி ஒளிந்து பதுங்கிக்கொள்கிறீர்கள். அந்தக் கல் சாலையில் செல்லும் அப்பாவியின் தலையைப் பதம் பார்க்கிறது. ஒருவேளை அந்த அப்பாவி உங்கள் அண்ணனாகவோ, அம்மாவாகவோ, தம்பியாகவோ இருந்தால்... உங்கள் சதை துடிக்குமா... துடிக்காதா?
பள்ளி-கல்லூரிகள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கோ, அநியாயமாக வழிப்பறி செய்யப்படும் கல்விக் கட்டணங்களை எதிர்த்தோ உங்கள் போராட்டங்கள் அமைந்துஇருந்தால், உங்கள் உணர்வுக்கு ஒட்டுமொத்தத் தமிழகமுமே தோள் கொடுத்திருக்குமே நண்பா?!
இந்த 'பஸ் டே’ கலாசாரம் சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் இவ்வளவு கிடையாதே! தெற்கில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் பஸ் டே ரகளைகளைப் பார்த்து அசூயை அல்லவா அடைகிறார்கள்? மாணவிகள் அச்சப்படுகிறார்கள். ஒட்டுமொத்த சென்னை மாணவர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என நினைக்கிறார்கள். வெளிப்படையாக, பச்சையாகச் சொல்வதெனில் உங்களை அவர் கள் 'பொறுக்கிகள்’ என நினைக்கிறார்கள். ஆனால், அதுவா உண்மை?
இந்த பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் அரசுக் கல்லூரிகளில் படிப்பவர்கள். அடிமட்ட, நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தின் பிள்ளைகள். எங்காவது இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டம் என்ற பெயரில் பஸ்ஸின் டாப்பில் ஏறி வெறியாட்டம் ஆடுகிறார்களா? அவர்கள் விரும்பினாலும் முடியாது. அவர்களுக்கு கல்லூரிப் பேருந்து இருக்கிறது. அதற்குள் ஒரு விசில் அடித்தாலே, அடுத்த நாள் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள். மாணவப் பருவத்தின் கொண்டாட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு பிராய்லர் கோழிகளைப்போல தான் பராமரிக்கப்படுகின்றனர் தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள். ஆனால், அவர்களுக்கு வளமான குடும்பப் பின்னணி இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு எம்.என்.சி. வேலைக்கு உத்தரவாதம் உண்டு. ஆனால், உங்கள் குடும்பப் பின்னணி அப்படியா நண்பா?
உண்மையில் உங்களுக்கு இந்த நிலை கோபத்தைத்தான் உண்டாக்க வேண்டும். பணம் படைத்தவனுக்குத் தரமான கல்வி, பணம் இல்லாதவனுக்கு நாலாம் தரக் கல்வி என்ற இந்தக் கேடுகெட்ட கல்விமுறை மீது கோபம் வர வேண்டும். கல்விக் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்கும் மோசடித் தனத்துக்கு எதிராகக் கோபம் வர வேண்டும் நண்பா. சாராய வியாபாரிகளும், மணல் கொள்ளையர்களும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும், ஊழல்வாதிகளும் 'கல்வித் தந்தைகளாக’ வலம் வரும் அவலத்துக்கு எதிராகக் கோபம் வர வேண்டும் நண்பா. ஏனெனில் இந்தக் கல்வி அமைப்பு மாணவர்களை மிக நேரடியாகப் பாதிக்கிறது. பணக்காரர்களை பணக்காரர்களாகவும், ஏழைகளை ஏழைகளாகவும் தொடர்ந்து பராமரிப்பதில் இந்தக் கல்வி அமைப்புக்கு முக்கிய பாத்திரம் உண்டா, இல்லையா?
ஆல்காட்டுக் குப்பம் திவ்யாவை ஞாபகம் இருக்கிறதா நண்பா? சென்னை பெசன்ட் நகர் அருகே உள்ள குப்பத்தின் குடிசையில் இருந்து எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் படிக்கச் சென்ற ஏழைப் பெண். யாரோ ஒரு மாணவியின் பணம் வகுப்பறையில் திருடுபோய்விட்டது என கல்லூரி நிர்வாகம் எல்லா மாணவிகளையும் சோதனை செய்தது. ஆனால், ஏழை சகோதரி திவ்யாவை மட்டும் நிர்வாணப் பரிசோதனை செய்தது. அந்த அவமானம் தாங்காமல் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். திவ்யா செய்த குற்றம் என்ன நண்பா? அவள் ஏழையாகப் பிறந்ததும், படிக்க ஆசைப்பட்டதும் மட்டும்தான் குற்றம். 'ஏழைகள் என்றால் திருடுவார்கள்’ என்ற அசிங்கமான பொதுப் புத்தி திவ்யாவின் உயிரைப் பறித்தது. இதைத் தற்கொலை என்பீர்களா? இல்லை நண்பா, இது இந்த அநீதியான கல்வி முறை செய்த பச்சைப் படுகொலை! உங்கள் சக மாணவியின் உயிர் பறிக்கப்பட்டதற்கு எதிராக நீங்கள் என்ன செய்தீர்கள்? ஓர் அஞ்சலிக் கூட்டத்துக்கேனும் அனைத்துக் கல்லூரி மாணவர் களும் திரண்டு இருக்க வேண்டாமா நண்பா? ஓர் இடத்தில் கூடி நின்று, ஒரே குரலில் அதிகார மையத்தை உலுக்கி எடுத்திருக்க வேண்டாமா நண்பா? கொண்டாட்டம் என்பது பேருந்தின் உச்சியில் ஏறி ஆட்டம் போடுவது அல்ல. அநீதிக்கு எதிராக போர்க் குணத்துடன் போராடுவதுதான் உண்மையான கொண்டாட்டம் நண்பா!
இப்படிப்பட்ட மாணவர் போராட்டத்துக்கு நீண்ட நெடிய வரலாறு நம் தமிழகத்திலேயே உண்டு. இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போராட்டத்தை இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய தலைமுறை மாணவர்கள்தான் நடத்தினார்கள். அதை முன்னின்று நடத்திய அறிஞர் அண்ணா, இப்போதைய பஸ் டே ரகளை நடந்த அதே பச்சையப்பன் கல்லூரியில்தான் படித்தார் நண்பா!
ஒரு வருடத்துக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டு வீசிக் கொன்று ஒழிக்கப்பட்டபோது, தமிழகத்தில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. அவற்றை முன்னின்று நடத்தியவர்களும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர்களும் நம்மைப் போன்ற மாணவர்கள்தானே நண்பா. செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர் கள் ஏழு நாட்களுக்கும் மேலாக உண்ணா விரதம் இருந்தார்கள். தங்களின் சுய நலன்களுக்காக அல்ல; இலங்கையில் தமிழர்கள் மீதான யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக!
இதோ கண் முன்னால் ஒரு தேர்தல் வரப்போகிறது. அநேகமாக கல்லூரி வாசல் மிதித்த பலர் வாக்கு அளிக்கவிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாக இருக்கும். என்ன செய்யப்போகிறீர்கள்? 'அரசியல் ஒரு சாக்கடை’ என ஒதுங்குவதா, அல்லது 'இன்னும் கொஞ்சம் போட்டுக்கொடுங்க’ என ஓட்டுக்கு வாங்கும் பணத்துக்குப் பேரம் பேசுவதா... இரண்டுமே உங்கள் கையில்தான்!
ஆனால், 'ஜனநாயகம்’ என்பது வாக்கு அளிக்கும் உரிமை மட்டுமே அல்ல. உணவு, உறைவிடம், கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாம் எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். ஃபுட்போர்டில் தொங்கத் தேவை இல்லாத அளவுக்குச் சரியான எண்ணிக்கையில், முறையான பேருந்து வசதியைப் பெறுவதும்கூட ஒரு ஜனநாயக நாட்டுக் குடிமகனின் உரிமைதான். இவை ஏன் எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்று கேள்வி கேட்டு, அதற்கான விடை தேடி செயலில் இறங்கும்போதுதான் உண்மையும் உலகமும் புரியும்!
போதும் நண்பா... நாம் வாகனங்களில் ஆடியது. இனியாவது, வாழ்வைக் கொண்டாட வா நண்பா!
இப்படிக்கு உன்னால் அழ நேர்ந்த ஒரு நண்பன்!

சனி, 22 ஜனவரி, 2011

அன்பு நண்பனுக்கு

தோல்விகள் மலையென குவிந்த பின்பு,
சொந்தங்கள் சோகங்களான பின்பு,
முயற்சிகள் முற்றும் துறந்த பின்பு,
உலகத்திற்கும் தனக்கும் விவாகரத்தான பின்பு,
சுவாசிப்பது பெரும் பணியான பின்பு,
வாழ்வின் அர்த்தம் அபத்தமான பின்பு,
எதற்கு வாழ்க்கை என்றான பின்பு,

என் அன்பு நண்பனுக்கு,
நான் சொல்ல நினைப்பது...

ஒரு முறை
வெற்றிகளின் மலையை அடைந்திட .. ,

சொந்தங்களை சந்தோஷங்களாக்கிட.. , 
முயற்சிகள் புன்னகையில் முடிந்திட.. ,
உலகத்தை தன்னுள் உணர்ந்திட..,
சுவாசிப்பதை செயலில் மறந்திட, 
வாழ்வின் பொருள் "நீ" என்றுணர்ந்திட,

இன்று நீ புதிதாய் பிறந்தாய் என எண்ணிக்கொள் , 
இந்த நண்பன் ..தோள் கொடுத்திட,. வாழ்வின் கை பற்றிக்கொள்!!

வியாழன், 20 ஜனவரி, 2011

வாழ்வில் வென்றிட

வாழ்வில் வென்றிட வேதாத்ரி மகரிஷி சொன்ன ரகசியம்... :-)

"முடியும்! முடியும்! என்னால் முடியும்,
முயற்சி செய்தால் எதுவும் முடியும்,

வாழ்வேன்! வாழ்வேன்! சிறப்பாய் வாழ்வேன்,
வாழ்வேன்! வாழ்வேன்! என் மனம் ஒன்றி வாழ்வேன்,

தருவேன்! தருவேன்! அள்ளித் தருவேன்,
அன்பையும் கருணையும் அள்ளித் தருவேன்,

நான் தன்னம்பிக்கை மிக்கவன்,
நான் ஆற்றல் மிக்கவன்,
நான் சக்தி மிக்கவன்,
நான் சுறுசுறுப்பானவன்,
நான் சந்தோஷமானவன்,
நான் கனவுகளை நிஜமாக்குபவன்,

முடியும்! முடியும்! என்னால் முடியும்,

முயற்சி செய்தால் எதுவும் முடியும்,

வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்!
வாழ்க வளமுடன்!"

என்பதை இரவு தூங்கும் முன்பும், காலை எழுந்தவுடனும் 1 வருடம் தொடர்ந்து சொன்னால்.... வாழ்வில் வெற்றி நிச்சயமாம்!!!

இதை முயற்சி செய்து , உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!!


திங்கள், 10 ஜனவரி, 2011

உழவர் திருநாள் - உதவி திருநாள்

ஏழை விவசாய குடும்பங்கள் உழவர் திருநாள் கொண்டாடிட...
நாம், ஆளுக்கோர் ஏழை விவசாய குடும்பத்தை தத்தேடுத்தால் என்ன??

உங்கள் கருத்து.. ??

விவசாயிகளுக்கென்று இயங்கும் நிறுவனங்கள் இதனை செய்கின்றனவா??
விவசாயிகளை நேரடியாக சென்றடையும் தளங்கள் ??

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!


ஆனந்த விகடனில் வெளியான .... நாஞ்சில் நாடன் பேட்டியின் ஒரு பகுதி....


''சினிமா மட்டும்தான் தமிழ் கலாசாரத்துக்கு அபாயமானதா என்ன?''
''கலாசாரம் என்பது எப்போதும் நிலையான ஒன்று இல்லை. அது மாறிக்கொண்டே இருப்பது. ஆனால், மரபைக் கணக்கில் எடுக்காத கலாசார மாற்றம் பாழ். அற மதிப்பீடுகளும் ஒழுக்க விழுமியங்களும்தான் ஒரு பண்பாட்டின் வேர்கள். தமிழ் சினிமாதான் தமிழ் சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. தமிழ் சமூகம் அளவுக்குச் சினிமாவின் கேடுகளை உள்வாங்கிக்கொண்ட சமூகம் வேறு எதுவும் கிடையாது. அதுபோக, அரசியலும் ஊடகமும் கல்வியும் நம் சமூகத்தை நாசம் செய்துகொண்டு இருக்கின்றன. கறிக்கோழியை வளர்ப்பதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெற்றோர்களிடம் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பிராய்லர் கோழியை வளர்ப்பதைப்போல பிள்ளைகளை வளர்த்தால், அந்தச் சமூகம் எப்படி உருப்படும்? படிப்பு, வேலை இதைத் தவிர, மனித வாழ்க்கைக்கு அர்த்தங்களே இல்லையா? குறிக் கோள்களே இல்லையா? நமது சமூகம் எப்படி மதிப்பீடுகளை இழந்துகிடக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் எனக்கு பி.எஸ்.என்.எல்லில் இருந்து ஒருதொலை பேசி அழைப்பு. எடுத்துப் பேசினால், 'ஹாய், மச்சான் சௌக்கியமா?’ என்றது. அது ஒரு பதிவு செய்யப்பட்ட குரல். எதிர்முனையில் இருப்பவர் யார்?  எழுத்தாளரா, கொலைகாரரா, ஆசிரியரா, நோய்வாய்ப்பட்டவரா, அவருக்கு என்ன வயது இருக்கும் என்று எந்தக் குறைந்த பட்ச அறிவும் இல்லாமல் கூவுகிற வியாபாரக் குரல்கள் என்னை இம்சை செய்கின்றன!''

''இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே?''

''உண்மைதான். தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம். ஆனால், இப்போது உள்ள மாணவர்களோ, 'மானாட மயிலாட’ பார்ப்பதற்குச் செலவழிக்கும் மணித் துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு, இன்று எந்தத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதிகூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள். நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?
இன்று ஸ்பெக்ட்ரமில்  1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம். ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன்.

எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!