ஞாயிறு, 27 டிசம்பர், 2009

வரவிருக்கும் விஜய் படங்களின் கதை சுருக்கம்

இன்று எதோ என் கேட்ட நேரம் ..."வேட்டைக்காரன்" பார்க்க நேர்ந்தது..

சிவகாசியில் - 1000 ஆட்களை அடிக்க ஆரம்பித்து.
திருப்பாச்சியில் - 1000 ஆட்களை அடித்து
போக்கிரி - 1000 ஆட்களை அடித்து
குருவியில் - 1000 ஆட்களை அடித்து..
வில்லுவில் - 1000 ஆட்களை அடித்து..
வேட்டைக்காரனிலும் 1000 ஆட்களை அடித்து நொறுக்குகிறார்..விஜய்
டாக்டர்.இளைய தளபதி விஜய்க்கு ஏன் இந்த கொலை வெறி .. என்று தெரியவில்லை..??

படத்திற்கு படம் இதையே எப்படி அவரால் செய்ய முடிகிறது என்றும் புரியவில்லை..
மத்த ஆக்ஷன் கதாநாயகர்களும் இதே போன்று செய்தாலும் ..ஓரிரு படங்களிலாவது வித்தியாசமாக செய்ய நினைக்கிறார்கள்..
ஆனால் தன் முடியிலிருந்து தான் அணியும் ஜீன்ஸ் வரை எதையும் மாற்றிக்கொள்ளாமல் படத்திற்கு படம் ரிஸ்க் எடுக்கும் நம் தளபதியின் சாமர்த்தியமே சாமர்த்தியம்!!

இவர் இதுவரை நடித்த படங்களை வைத்து , இவரது இனி வரும் படங்களின் கதையை உருவாக்கும் முயற்சியே இந்த பதிவு..

காட்சி-1:
சென்னை..
நேர்மையான போலிஸ் அதிகாரி / நேர்மையான அரசியல்வாதி / நியாயமான வியாபாரி / சேரியில் வாழும் ஏழை மக்கள் - இவர்களில் ஒருவரை சித்ரவதை செய்து / பின் கொலை செய்யும் ரெளடி..
இந்த ரெளடிக்கு படு பயங்கரமாக கத்த தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ..
போலீஸ் / மிலிட்டரி / முதலமைச்சர் என்று எல்லோரும் இந்த ரெளடியின்(வில்லன் 1) காண்டாக்ட் லிஸ்டில்....
இந்த ரெளடியின் பெயர் படு பயங்கரமாக இருக்க வேண்டும் - "சனியன்" சகட, "பட்டாசு" பாலு,"வெல்டிங்" குமார்.. போன்று
இவன் டாட்டா சுமோவிலோ. அல்லது மஹிந்தரா போலேரோவிலோ வந்து போவது மிகவும் அவசியம்..
கட்

காட்சி - 2:
தூத்துக்குடி / மதுரை/ திருநெல்வேலி / சிவகாசி / திருப்பாச்சி - இதில் எதோ ஒரு ஊரில் - அட்டகாசம் செய்யும் சிறு லோக்கல் ரெளடிகள் - கடைக்காரர்களிடம் வசூல் செய்பவர்கள் / பெண்களை கிண்டல் செய்பவர்கள் / கந்து வட்டிகாரர்கள் / குடிகாரர்கள் - இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ..நம் தளபதியின் நண்பர் ஒருவர் (இவர் காமெடியானாக இருப்பது அவசியம்) வந்து திரும்பியிருக்கும் தளபதியிடம் சொல்ல...

தளபதி ஓபனிங் ஸ்டைல் (தன் கைகளாலேயோ/ துண்டு/ கர்ச்சிப்பு / சிகிரெட் வைத்து செய்யலாம்)
முடிந்ததும் ... கால்களிலிருந்து .. மெல்ல நகர்ந்து கமெரா தளபதி குழந்தை சிரிப்பில் முடிக்க வேண்டும்...
பின் ..சிறு ரெளடிகளை துவம்சம் செய்வார் தளபதி..
பின் ஒரு பஞ்ச் டயலாக்..
(ஓபனிங் ஸ்டைலும் , பஞ்ச் டயலாக்கும் - எப்போதெல்லாம் தளபதி புத்துணர்ச்சி பெறுகிறாரோ அப்போதெல்லாம் வைக்கவேண்டியது அவசியம்)
பின் ஓபனிங் பாடல்..இதில் சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்ல வேண்டியது அவசியம் (பாடல் - 1)
(படம் முழுக்க தளபதிக்கு - லேவிஸ் ஜீன்ஸ் , விராங்கலர் டி-ஷர்ட், மற்றும் நைக்கி ஷூவும் தான் காஸ்டியூம் - அவர் எந்த ஊரில் இருந்தாலும் / எப்படிபட்ட குடும்பத்தில் பிறந்தாலும் இது மாற்றப்பட மாட்டாது)

காட்சி - 3:
எதுவும் தெரியாத பூனை மாதிரி தளபதி தன் வீட்டிற்குள் வந்து நல்ல பிள்ளை போல் இருக்க..
தளபதி குடும்பம் அறிமுகம்..
அப்பா - தளபதியை உருப்படாதவன் என்று திட்டுபவர்..
அம்மா - ஒரு ஏமாந்த சோனகிரி - தன் பிள்ளை தங்கம் என்று கருதும் வெகுளி..
தங்கை - காலேஜ் / பள்ளி படிக்கும் தங்கை ,
(அப்பா/அம்மா இல்லையென்றால் - காலேஜ் படிக்கும் தங்கை / தம்பி இருப்பது அவசியம்)
நண்பர்கள் - இரண்டு காமெடியன்கள் / இரண்டு மூன்று ஸ்டண்ட் மேன்கள்..
இவர்களின் சந்தோஷமான வாழ்க்கையை எடுத்துச்சொல்லும் ஒரு பாடல்..(பாடல் - 2 - குத்து பாடலாக இருப்பது அவசியம் - இது ஒரு ஐடம் பாடலாகவும் இருக்கலாம்)
பின் எதோ காரணங்களினால் - சென்னைக்கு ரயில் ஏறும் தளபதி

காட்சி - 4:
கதாநாயகி அறிமுகம்..மற்றும் கவுத்தல்.
சென்னைக்கு வரும் ரயிலிலோ / அல்லது தங்க வந்த உறவினர் வீட்டினருகிலோ - கதாநாயகி இருக்க வேண்டியது அவசியம்.. ஒவ்வொரு நொடியும் நமக்கு முக்கியம்
நண்பர்கள் - சென்னையில் புது காமெடியன்களையும் உபயோகித்துக்கொள்ளலாம் / அல்ல ஊரிலிருந்து தளபதியுடனே காமெடியனும் வரலாம்.. (இது பட்ஜெட் பொறுத்து பார்த்துக்கொள்ளப்படும்)
தளபதி - காமெடி நண்பர்கள் - கதாநாயகி - வைத்து இரண்டு அல்லது மூன்று காட்சிகள் அமைக்க வேண்டும்.
இந்த காட்சி முடிவடையும் போது தளபதி - கதாநாயகி - ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் (பாடல் -3 , பாடல் - 4) முடித்திருக்க வேண்டும் - தங்கள் காதலை சொல்லியிருக்க வேண்டும்..

காட்சி - 5:
சிக்கலில் கதாநாயகி / உறவினர் / நண்பர்கள்
இப்படி இன்பமாக இருக்கும் நம் தளபதிக்கு சென்னையின் உண்மை முகத்தை காட்டும் வில்லன் -2 ..
வில்லன் -2 ( வில்லன் -1ன் நெருங்கிய சொந்தக்காரன்- வில்லன் 1 போன்றே தோற்றம் கொண்டவர் - இதுவரை சரியான வில்லன் வாய்ப்பு கிடைக்காததால் - வில்லன் 2 ஏற்று நடிப்பவர்)
வில்லன் - 2 - பெண் ஆசையால் கதாநாயகியையோ / உறவினன் மனைவியோ / நண்பன் தாய் / தங்கையையோ - கைவைக்க..
அங்கு நம் தளபதி அவனை கொத்து புரோட்டா செய்கிறார்..
இதில் பெரிதும் கோபம் அடையும் வில்லன்-2 தளபதியை பார்த்துக்கொள்வதாக சொல்லி காரை ரிவர்ஸில் ஓட்டி செல்கிறான்..
பாடல் - 5 - வெற்றி பாடல் - தளபதியை மக்கள் வாழ்த்தி பாடும் பாடல் - இதில் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற "பஞ்ச்" மக்கள் சொல்வதாக இருக்க வேண்டும.

காட்சி - 6:
வில்லன் - 2 நடந்ததை வில்லன் - 1யிடம் சொல்ல..
வில்லன் -1 , தனது பண பலம் , செல்வாக்கு பயன்படுத்தி போலீஸ் அதிகாரியை (வில்லன் - 3) தளபதி பக்கம் திருப்பிவிடுகிறார்..
பின் போலீஸ் அதிகாரி தளபதியை ரவுண்டு கட்டுகிறார்..
ஆனால் போலீஸ் அதிகாரி பிடியில் இருந்து எப்படி கதாநாயகி / நண்பர்கள் / உறவினர்கள் ஆகியோரை தளபதி தன் அறிவு/கராத்தே கொண்டு காப்பாற்றுகிறார் என்பதை பெரும் பொருட்செலவில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் படமாக்கலாம்..
பின் போலீஸ் அதிகாரி "அவன் சாதாரண ஆள் இல்ல... அவன் வீரன் / சூரன் / நல்லவன்" என்று வில்லன் -1யிடமிருந்து ஜகா வாங்குகிறார்..
இதை பார்த்து கோதிக்கும் வில்லன் -1 ,வில்லன் - 2 வைத்து தளபதிக்கு உயிருக்கு உயிராக இருக்கும் ஒருவரை (தாய் / தங்கை / கதாநாயகி / நண்பர்கள்) கடத்துகிறார்..பின் செல்பேசியில் சவால் விடுகிறார்..
மறுபுறம் தளபதி
"பஞ்ச் - 2 , பஞ்ச் - 3, பஞ்ச் -4" சொல்கிறார்...பின் செல்பேசியை புது யுக்தி கொண்டு சுவிச் ஆஃப் செய்கிறார்..

இடைவேளை

காட்சி - 7:
ஏர்டெல் போன் நெட்வர்க் மற்றும் தன் நண்பர்கள் நெட்வர்க் உதவியுடன்
வில்லன் -2ஐ எப்படியோ பணையக்கைதியாக்கி .. தனக்கு உயிருக்கு உயிரானவரை மீட்டுக்கொள்கிறார்..
ஆனால் தன் கோபத்தால் வில்லன் -2வை வதம் செய்துவிடுகிறார் தளபதி..
தன் நெருங்கிய வில்லன் -2வின் மறைவால் கொந்தளிக்கும் வில்லன் -1 , தனது சென்டரல்/எக்மோர் அமைச்சர் நண்பர்/சொந்தக்காரர் (வில்லன் - 4) ஒருவரிடம்...
"அவன் சாதாரண ஆள் இல்ல...என் கண்ணுக்குள்ள விரல் விட்டு ஆட்டறான்" ..
மேலும் ரிவர்ஸ் பஞ்ச் - 1,ரிவர்ஸ் பஞ்ச் - 2, ரிவர்ஸ் பஞ்ச் - 3 சொல்கிறார்..
இதை கேட்டு அமைச்சர் மெளனமாக தான் சென்னை வந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்..

காட்சி - 8:
அமைச்சர் விமானம் தில்லியிருந்து சென்னை வந்தடைவதற்குள் -
நம் தளபதி வில்லன் -1 செய்யும் எல்லா தொழிலையும் தடுத்து நிறுத்த - தானும் அந்த (எல்லா சட்ட விரோத) தொழில்களில் குதிக்கிறார் - பெரும் பணக்காரர் ஆகிறார் - டாட்டா சுமோ வாங்குகிறார் - நோக்கியா 1100 மாடல் போனிலிருந்து - N97 மாறுகிறார்..
(கதாநாயகி / அம்மா / தங்கை / தம்பி ஆகியோர் இன்னும் சில சீன்களுக்கு தேவையில்லை.. அவர்களை கடைசி ஷெடியூலில் கூப்பிட்டு கொள்ளலாம்..)
அமைச்சர் (வில்லன் -4) தனது பதவி பலம் , பண பலம் , அடியாள் பலம் எல்லாம் கொண்டு நம் தளபதியை ..பிடிக்க பார்க்கிறார்..
ஆனால் தளபதி எப்போதும் போல தனது அறிவாற்றலால் தப்பித்து.. .அமைச்சரின் பதவி,பணம்,ஆள் பலத்திற்கு உலை வைக்க பார்க்கிறார்...இடையிடையே பல பல "பஞ்ச்" வசனங்கள் சொல்கிறார்..

காட்சி - 9:
இப்படி டாம் அண்ட் ஜேரி போல டென்ஷனாக போகும் படத்தில் , ஒரு அணுகுண்டை வைக்கிறார் வில்லன் - 4.
நம் தளபதியின் நெருங்கிய (தாய் / தங்கை / தம்பி / நண்பன்) ஆகியவர்களில் ஒருவரை வில்லன் - 4 மற்றும் வில்லன் - 1 சேர்ந்து போட்டுத் தள்ளுகிறார்கள்...
இதை பார்த்த கதாநாயகியையும் வில்லன் - 4 ருசிக்க பார்க்கிறார்/கடத்துகிறார்..
முதலில் நம் தளபதி சாவு வீட்டில் அழுது நடிக்கிறார் - எப்போதும் போல வாய் பொத்தி, தேம்பி தேம்பி அழுகிறார் தளபதி... அழும் ஈமோஷன் முடிவதற்குள்..கண்கள் சிவந்திட , புஜங்கள் புடைத்திட , இந்த உலகத்திற்கே கேட்கும் படி கத்துகிறார்... புலி போல் பாய்கிறார்..
தனது சுமோவை எந்த சிக்னலிலும் நிறுத்தாமல் .. மிக மிக விரைவாக ஓட்டி செல்கிறார்..
பாடல் - 5
(சூப்பர் பாஸ்ட் பாடலாக இருக்க வேண்டும் - இதை கேட்கும் ரசிகர் இரத்தம் தளபதி இரத்தம் போல் கொதிக்க வேண்டும் - அல்லது 1000 பாட்டில் குளுகோஸ் ஏற்றுவது போல் உணர வேண்டும்)

காட்சி - 10 :
காட்சி - 11 :
இந்த இரு காட்சிகளுக்கும் வருவதற்கு முன்பு தளபதி எப்படியும் ஒரு 200 ஆட்களை அடிதிருக்க வேண்டும்.. இது இயக்குனர் பொறுப்பு)

சண்டை
முதல் ரவுண்டு - 200 ஆட்கள்..
இரண்டாவது ரவுண்டு - 200 ஆட்கள்
மூன்றாவது ரவுண்டு - 400 ஆட்கள்..

இவர்களை தளபதி கை/கால்/ தலை/ கத்தி/ துப்பாக்கி/ சோடா பாட்டில்/டியூப் லைட்/தண்ணி தொட்டி/டாட்டா சுமோ என்று எதை வைத்தும் அடிக்கலாம் / கொல்லலாம்.. ஆனால் தளபதிக்கு அதிக பட்சம் இரண்டு கீறல்கள் மட்டுமே இருக்கலாம்..(படம் முழுவதும் தளபதிக்கு இரண்டு பிரஷ் சிவப்பு சாயம் மட்டுமே பயன் படுத்தப்படும்)

காட்சி - 12:
வில்லன் - 4 மற்றும் வில்லன் -1 ஆகியோரை ஆர்டர் வரிசையில் கொல்கிறார் நம் தளபதி..
இந்த சண்டை மட்டும் எப்படியும் ஒரு 10-15 நிமிடம் இருக்க வேண்டியது மிக முக்கியம்..
பின்
கதாநாயகியை காப்பாற்றுகிறார்..
ஊர் மக்கள் , போலீஸ் , முதல் அமைச்சர் , பிரதம மந்திரி , ஜனாதிபதி ஆகியோர் தளபதியின் வீர செயல்களை பாராட்டி ...
"ஊருக்கு உன்ன மாதிரி ஒருத்தன் இருந்தா...போதும் பா..
நம்ம நாடு எங்கையோ போய்டும்" என்பார்கள்...

அதற்கு நம் தளபதி..பவ்யமாக
"நான் ஒண்ணும் பெரிசா பண்ணல..
நான் ஒரு சாதாரண இந்திய குடிமகனா தப்ப தட்டிக்கேட்டேன் அவ்வளவு தான்
இதே மாதிரி எல்லோரும் தப்ப தட்டி கேட்டாலே நம்ம நாடு எங்கையோ போய்டும்"
என்பார்..

பின் இவருக்காக காத்துக்கொண்டிருக்கும் கதாநாயகி கைப்பிடித்து, மற்றும் தன் காமெடி நண்பர்களுடன் ஊருக்கு திரும்பி செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ஆட்டோ ஏறி செல்வார்...

மீண்டும்
பாடல் -1 அல்லது பாடல் - 3 அல்லது பாடல் - 4
(பாடல் - 2 மற்றும் பாடல் - 5 இங்கு பயன்படுத்தக்கூடாது)


வணக்கம்..

1 கருத்து:

  1. வாவ் சுறா படக்கதை எப்படி லீக் ஆனது?
    ((: 100 க்கு 200 % சரியாக யுகிதிருகிறீர்கள்

    பதிலளிநீக்கு