ஞாயிறு, 11 டிசம்பர், 2011

கண்ணாடி. .முன்னாடி.. எது??




ஒவ்வொரு முறையும்
கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது தோன்றுவது !!!

என்னை போல் தோற்றம் கொண்டு கண்ணாடி உலகில் வாழ்பவன் நிஜமா?
நான் அவனது பிம்பமா? யார் நிஜம் - யார் பிம்பம்??

முகம் பார்க்க தோன்றும் போது மட்டும் நாங்கள் சந்தித்துக்கொள்வது ஏன்?

திடீரென ஒரு நாள்,  எங்களில் ஒருவர் கண்ணாடி முன் / பின் தோன்றாவிட்டால் மற்றவரின் நிலை தான் என்ன??

ஒருவேளை எங்களில் ஒருவர் அழகாய் இருந்து மற்றொருவர் அழகற்றவராய் இருந்திருந்தால், இருவரின் வாழ்க்கை தான் எப்படி மாறியிருக்கும்??
பொய் என்னும் உலகிலேயே வாழ்ந்து இருப்போம் இருவரும்...

நாம் தினம் தினம் முகம் பார்த்து ரசிக்கும் கண்ணாடிகள்...
வேறு உலகின்... கதவுகளாகவும்.... ஜன்னல்களாகவும்..இருந்திருந்தால்???..

நிஜம்..
பிம்பம்...
எது நான்?
கண்ணாடி. .முன்னாடி.. எது??

திங்கள், 24 அக்டோபர், 2011

நிழல்

நான்:

காலை முதல் மாலை வரை
சில நேரம் என்னை பின் தொடர்ந்து.....
சில நேரம் என்னை வழி நடத்தி....
ஒரு பொழுதும் என்னை விட்டு பிரியா ... என் நிழல்..நண்பா..
இரவில் மட்டும் ... நீ எங்கே ?

நிழல்:

நாள் முழுதும்.... உன் உருவத்தில்.. அடைப்பட்ட நான்...
பரந்து ...விரிந்தேன்..
உனக்கு இரவை கொடுத்தேன்....

நாள் முழுதும்... நான் உன் காலடியில்..
இரவு.. முழுதும்... நீ என் காலடியில்...

சனி, 22 அக்டோபர், 2011

உனக்கென மட்டும்

உனக்கென மட்டும் கண்கள் விழித்ததடி.
உனக்கென மட்டும் வார்த்தை தொலைந்ததடி..
உனக்கென மட்டும் வாழ்க்கை ருசித்ததடி..
ஆம்..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி,

இன்னும்...... மயக்கம் என்ன?




திங்கள், 17 அக்டோபர், 2011

கூரை , நான் , கொசு வலை


ஓர் கூரை
ஓர் கூரையின் கீழ் வாழ்வதென்பதன் 
உண்மையான அர்த்தம்...

கவலையில்லை 
வீட்டை பூட்டினோமா என்ற கவலையில்லை..
மாடியில் காய வைத்த வத்தல் கவலையில்லை...
எடுக்க மறந்த குடை கவலையில்லை...

என் கவலை .... 
இந்த மழை முடியும் வரை... என் கூரை தாங்குமா?
என் கவலை...
இந்த மழை முடியும் வரை... என் குடும்பம் பசி தாங்குமா?




மற்றும் நான்
நாளை சைக்கிள் ஓட்டத் தேவையானவை
சைக்கிள் மற்றும் உயிருடன் நான்!!

சொத்து
என் தாத்தா விட்டு சென்ற ஓரே சொத்து...
என் தாத்தாவிடம் கூட்டி செல்கிறது..


என் வீடு
என் வீட்டுச் சுவர்களை நான் பார்த்தில்லை...
என் வீட்டு நட்சத்திர கூரையை தொட்டதில்லை...
இவ்வளவு பெரிய வீடு இருந்தும்...
கொசு வலை கட்டும் போது மட்டும் சற்று சிரமப்படுகிறேன்...

கொசு வலை
தினம் தினம் பல நூறு கொசுக்கள்
தங்கள் குழந்தைகளை கூட்டி செல்லும்..
மனிதக்காட்சி சாலை....


கொசு வலை
இரையே வலை விரிக்கும் விசித்திரம்


புதன், 12 அக்டோபர், 2011

இரவில்லா நாட்கள்

கனவு ஏது
உறக்கம் ஏது..
ஓய்வு ஏது...

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

ஓட்டம் உண்டு
ஏக்கம் உண்டு..
கோபம் உண்டு...

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

தான் மட்டும்..
பணம் மட்டும்
பொய் மட்டும்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

வலி கொஞ்சம்..
பழி கொஞ்சம்
பாவம் கொஞ்சம்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

நிலவு வேண்டும்..
குளிர்க்காற்று வேண்டும்
இருளும் வேண்டும்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

போதும் ... போதாது

போதாது என்றால் ...
எதுவும் போதாது தான்..

போதும்.. என்றால்
செலவுகள் குறையும்
கனவுகள் மறையும்..
ஏக்கங்கள் தீரும்...
நிம்மதி வளரும்...
வாழ்க்கை ஓரிடத்தில் நின்றபடி ஓடும்...

போதும் என்பதா.... போதாது என்பதா??
இந்த குழப்பம் தான் - மனிதனோ??



ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

மாற்றம்

"நீ சுத்தமா மாறிட்ட"
இது பாராட்டா? அல்லது விமர்சனமா?

நாம்..
உருவத்தில், செயலில் , சிந்தனையில்...
மாற்றத்தை ஏற்க மறுப்பது ஏன்?

தன்னுடைய மாற்றத்தை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளும் மனிதன்..
தன்னை சுற்றி உள்ள மனிதரின்
மாற்றத்தை ஏற்க மறுப்பது ஏன்?

இது எப்படி இருந்தாலும்...
மாற்றம் ஏற்க மறுக்கும்
மனிதனின் விசித்திரமும் மாறும்,

மாற்றம் ஒன்றே நிரந்திரம்..

புதன், 22 ஜூன், 2011

வாழ்க்கையெனும் சாலை

வாழ்க்கையெனும் சாலையில் 
முயற்சிகள் எல்லாம் மைல்கற்கள்
வெற்றியும் தோல்வியும் திசைக்காட்டிகள்
இலக்கு ?
திசைக்காட்டிகள் முடிவு செய்யும் சிலருக்கு
மைல்கற்கள் முடிவு செய்யும் சிலருக்கு...

திசைகளும் மைல்களும் மறந்து 
போகும் சாலை எதுவாயினும்
விபத்துகளின்றி போனால் போதும் 
என்ற எண்ணமே பலருக்கு....  :-)

திங்கள், 20 ஜூன், 2011

ஒன்றினுள் ஒன்று

தூக்கம்
தினம் தினம் .. சுகம்
நிரந்தரமானால்... சோகம்..


கனவு
உழைப்பாளியின் வரம்
சோம்பேறியின் சாபம்


வரம்
வாழ்க்கை புரிந்தவனுக்கு மகுடம்,
வாழ்க்கை தொலைத்தவனுக்கு பாரம்


சாபம்
நிரந்தர தூக்கத்தை எண்ணி,
இன்று சுவாசிக்க மறக்கடிக்கும் எண்ணம்..


பயம்
எண்ணங்கள் புவி அளவு படர
புவியின் பாரத்தை மனதில் சுமக்க
பாரமே எண்ணங்களாகி
பின், வாழ்க்கையே பாரமாகும் - பயம்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

புதிய முயற்சிகள்


சனி, 5 மார்ச், 2011

கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கடிதம்

விகடனில் இந்த வாரம் .........

கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கடிதம்...

ண்பா... 'பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம், பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்....’ என மதுஸ்ரீ குரலில் இழையும் பாடல் எனக்கும் பிடிக்கும் நண்பா. ஆனால், 'பஸ் டே’ கொண்டாட்டம் என்ற பெயரில் சென்னை கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் அராஜகம் பேருந்துப் பயணத்தையே திகில் அனுபவமாக மாற்றி இருப்பது கொடுமை. நீங்கள் நடத்தும் 'பஸ் டே’ கொண்டாட்ட ரகளைகளால்... சுற்றியிருக்கும் எல்லோருக்கும் அந்த நாள், ஆயுளுக்கும் மறக்க முடியாத வடுவாக மாறுவதை அறிவீர்களா?

இந்த 'பஸ் டே’ கலாசாரம் முதலில் எப்படி வந்தது நண்பா? கல்லூரி வந்து செல்ல பெரும்பாலான மாணவர்களுக்கு பேருந்து மட்டுமே வாகனமாக இருந்த காலத்தில், அந்தப் பயணம் அனைவருக்கும் மிக இனிய நினைவுகளை வழங்கியது. சில கிலோ மீட்டர் பயணத்தில் எத்தனை எத்தனை நட்புகள், காதல்கள். பேச்சும், சிரிப்பும், பாட்டும், கும்மாளமுமாக அந்த இளமையின் துள்ளலை மற்ற பயணிகளும் ஏக்கத்துடன் ரசித்தனர். இப்படி ரம்மியமான நினைவுகளை வழங்கிய பேருந்துக்கு மரியாதை செய்யும் விதமாகவே பஸ் டே கொண்டாட்டங்கள் தொடங்கின. ஆனால் நண்பா, அண்மை வருடத்தைய நிகழ்வுகள் அப்படி இனிமை நினைவுகளையா தருகின்றன?
வாகனங்கள் நகர்ந்து செல்லும் மாநகரச் சாலைகளில் பெருங்கூட்டமாகத் திரண்டு பேருந்தின் மீது ஏறி உற்சாகம் பொங்க நீங்கள் வருகிறீர்கள். அலங்கரிக்கப்பட்ட தேர்போல, அந்த நகரப் பேருந்து போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து வருகிறது. வெளியில் சாலை நடுவே விசில் சத்தமும், கூச்சலும், பாட்டும், ஆட்டமும் தூள் பறக்கிறது. சுற்றியிருக்கும் யார் பற்றியும் உங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் நண்பா, அந்த பேருந்தை ஓட்டிவரும் ஓட்டுநருக்கு கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகனோ, மகளோ இருக்கக்கூடும். டிராஃபிக்கில் சிக்கித் தவிப் பவர்களில் உங்கள் அப்பாவின், அம்மாவின் சாயலில் ஆயிரம் பேர் இருப்பார்கள். உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் உங்கள் முகங்களில் தங்கள் பிள்ளைகளின் சாயல்களையே காண்கிறார்கள் நண்பா. எங்கெங்கோ படித்துக்கொண்டு இருக்கும் மகள்/மகன்களின் முகங்கள் கவலையோடு அவர்களின் மனங்களில் வந்து போகும். அன்று இரவு அவர்களுக்கு உறக்கம் வராது நண்பா! அதே டிராஃபிக் நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் நிற்கும் கூட்டத்தில் பீட்ஸா கார்னரில் வேலை பார்க்கும் இளைஞர்களும் உண்டு. அவர்களில் பலர், பகலில் பீட்ஸா டெலிவரி செய்து மாலைக் கல்லூரிகளில் படிப்பவர்கள். ஐந்து நிமிட தாமதத்தில் அவர்களின் ஒருநாள் சம்பளம் கானல் நீராகும் வேதனை உங்களுக்குப் புரியுமா நண்பா?
கல்லூரிப் பருவம் கொண்டாட்டங்கள் நிறைந்தது, கொண்டாடப்பட வேண்டியது. அன்றாட வாழ்க்கையே கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். ஏனெனில், ஒவ்வொரு நாளும் புதிய புதிய நெருக்கடிகள் நம்மைச் சூழ் கின்றன. அவற்றைக் கண்ணீரால், கோபத்தால் எதிர்கொள்வதைக் காட்டிலும்... கொண்டாட்டத்தால் எதிர்கொள்வதே சிறந்த வழி. ஆனால் நண்பா, நமது கொண்டாட்டம் என்பது சுற்றிஇருப்பவர்களுக்குத் துன்பங்களைப் பரிசளிக்கலாமா? அடுத்தவர்களைத் தொந்தரவு செய்து, அவர்களின் வேலைகளைக் கெடுத்து, நடு ரோட்டில் நிற்கவைத்து, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? 'முடியும்’ எனில், அது ஆரோக்கியமான மனநிலையா? பிறரை இம்சித்து இன்பம் காண்பது மன நோய்க்கான ஆரம்ப அறிகுறி அல்லவா?
அண்மையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பஸ் டே கொண்டாட்டம் பெரும் கலவரமாக முடிந்ததை அறிவாய் நண்பா. காவலுக்கு வந்த காவலர்கள் மீது கற்கள் எறிந்து காயப்படுத்தி இருக்கிறார்கள் மாணவர்களின் மாண்பு உணராத சிலர். கல்லூரி வளாகம் எங்கும் கற்களும், கட்டைகளும், செருப்புகளும் சிதறிக்கிடக்கின்றன. 'ஸ்டூடன்ட் பவர்னா என்னன்னு தெரியுமா?’ எனப் பல சினிமாக்களில் நாம் வீர வசனங்கள் கேட்டிருக்கிறோம். இதுதானா அந்த ஸ்டூடன்ட் பவர்? இப்படி ஒரு ஸ்டூடன்ட் பவர் நமக்கு அவசியமா நண்பா?
உண்மையில் 'மாணவர் சக்தி’ என்பதற்கு அண்மைக் கால உதாரணம், ஆந்திராவின் உஸ்மானியப் பல்கலைக்கழக மாணவர்கள்! பல வருடங்களாக நீடித்து வரும் ஆந்திரா - தெலுங்கானா போராட்டம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் குறிப்பிடத்தகுந்த பங்களிப் பைச் செலுத்திய உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வருடம் மிகத் தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். எதற்கும் அஞ்சவில்லை, விட்டுக்கொடுக்கவில்லை. இறுதியில் மத்திய அரசு தனித் தெலுங்கானா அறிவிப்பை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்போது அந்த அறிவிப்பை செயல்படுத்தக் கோரி போராடுவதும் அதே மாணவர்கள்தான் நண்பா. இதன் பொருட்டு அவர்கள் போலீஸின் அடக்குமுறைகளை நடு வீதிக்கு வந்து நேருக்கு நேர் எதிர்கொள்கின்றனர். ஆனால், நீங்கள் செய்வது என்ன நண்பா? பாதுகாப்புக்கு வரும் போலீஸ் மீது கல் எறிந்துவிட்டு, கல்லூரி வளாகத்துக்குள் ஓடி ஒளிந்து பதுங்கிக்கொள்கிறீர்கள். அந்தக் கல் சாலையில் செல்லும் அப்பாவியின் தலையைப் பதம் பார்க்கிறது. ஒருவேளை அந்த அப்பாவி உங்கள் அண்ணனாகவோ, அம்மாவாகவோ, தம்பியாகவோ இருந்தால்... உங்கள் சதை துடிக்குமா... துடிக்காதா?
பள்ளி-கல்லூரிகள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கோ, அநியாயமாக வழிப்பறி செய்யப்படும் கல்விக் கட்டணங்களை எதிர்த்தோ உங்கள் போராட்டங்கள் அமைந்துஇருந்தால், உங்கள் உணர்வுக்கு ஒட்டுமொத்தத் தமிழகமுமே தோள் கொடுத்திருக்குமே நண்பா?!
இந்த 'பஸ் டே’ கலாசாரம் சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் இவ்வளவு கிடையாதே! தெற்கில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் பஸ் டே ரகளைகளைப் பார்த்து அசூயை அல்லவா அடைகிறார்கள்? மாணவிகள் அச்சப்படுகிறார்கள். ஒட்டுமொத்த சென்னை மாணவர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என நினைக்கிறார்கள். வெளிப்படையாக, பச்சையாகச் சொல்வதெனில் உங்களை அவர் கள் 'பொறுக்கிகள்’ என நினைக்கிறார்கள். ஆனால், அதுவா உண்மை?
இந்த பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் அரசுக் கல்லூரிகளில் படிப்பவர்கள். அடிமட்ட, நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தின் பிள்ளைகள். எங்காவது இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டம் என்ற பெயரில் பஸ்ஸின் டாப்பில் ஏறி வெறியாட்டம் ஆடுகிறார்களா? அவர்கள் விரும்பினாலும் முடியாது. அவர்களுக்கு கல்லூரிப் பேருந்து இருக்கிறது. அதற்குள் ஒரு விசில் அடித்தாலே, அடுத்த நாள் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள். மாணவப் பருவத்தின் கொண்டாட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு பிராய்லர் கோழிகளைப்போல தான் பராமரிக்கப்படுகின்றனர் தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள். ஆனால், அவர்களுக்கு வளமான குடும்பப் பின்னணி இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு எம்.என்.சி. வேலைக்கு உத்தரவாதம் உண்டு. ஆனால், உங்கள் குடும்பப் பின்னணி அப்படியா நண்பா?
உண்மையில் உங்களுக்கு இந்த நிலை கோபத்தைத்தான் உண்டாக்க வேண்டும். பணம் படைத்தவனுக்குத் தரமான கல்வி, பணம் இல்லாதவனுக்கு நாலாம் தரக் கல்வி என்ற இந்தக் கேடுகெட்ட கல்விமுறை மீது கோபம் வர வேண்டும். கல்விக் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்கும் மோசடித் தனத்துக்கு எதிராகக் கோபம் வர வேண்டும் நண்பா. சாராய வியாபாரிகளும், மணல் கொள்ளையர்களும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும், ஊழல்வாதிகளும் 'கல்வித் தந்தைகளாக’ வலம் வரும் அவலத்துக்கு எதிராகக் கோபம் வர வேண்டும் நண்பா. ஏனெனில் இந்தக் கல்வி அமைப்பு மாணவர்களை மிக நேரடியாகப் பாதிக்கிறது. பணக்காரர்களை பணக்காரர்களாகவும், ஏழைகளை ஏழைகளாகவும் தொடர்ந்து பராமரிப்பதில் இந்தக் கல்வி அமைப்புக்கு முக்கிய பாத்திரம் உண்டா, இல்லையா?
ஆல்காட்டுக் குப்பம் திவ்யாவை ஞாபகம் இருக்கிறதா நண்பா? சென்னை பெசன்ட் நகர் அருகே உள்ள குப்பத்தின் குடிசையில் இருந்து எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் படிக்கச் சென்ற ஏழைப் பெண். யாரோ ஒரு மாணவியின் பணம் வகுப்பறையில் திருடுபோய்விட்டது என கல்லூரி நிர்வாகம் எல்லா மாணவிகளையும் சோதனை செய்தது. ஆனால், ஏழை சகோதரி திவ்யாவை மட்டும் நிர்வாணப் பரிசோதனை செய்தது. அந்த அவமானம் தாங்காமல் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். திவ்யா செய்த குற்றம் என்ன நண்பா? அவள் ஏழையாகப் பிறந்ததும், படிக்க ஆசைப்பட்டதும் மட்டும்தான் குற்றம். 'ஏழைகள் என்றால் திருடுவார்கள்’ என்ற அசிங்கமான பொதுப் புத்தி திவ்யாவின் உயிரைப் பறித்தது. இதைத் தற்கொலை என்பீர்களா? இல்லை நண்பா, இது இந்த அநீதியான கல்வி முறை செய்த பச்சைப் படுகொலை! உங்கள் சக மாணவியின் உயிர் பறிக்கப்பட்டதற்கு எதிராக நீங்கள் என்ன செய்தீர்கள்? ஓர் அஞ்சலிக் கூட்டத்துக்கேனும் அனைத்துக் கல்லூரி மாணவர் களும் திரண்டு இருக்க வேண்டாமா நண்பா? ஓர் இடத்தில் கூடி நின்று, ஒரே குரலில் அதிகார மையத்தை உலுக்கி எடுத்திருக்க வேண்டாமா நண்பா? கொண்டாட்டம் என்பது பேருந்தின் உச்சியில் ஏறி ஆட்டம் போடுவது அல்ல. அநீதிக்கு எதிராக போர்க் குணத்துடன் போராடுவதுதான் உண்மையான கொண்டாட்டம் நண்பா!
இப்படிப்பட்ட மாணவர் போராட்டத்துக்கு நீண்ட நெடிய வரலாறு நம் தமிழகத்திலேயே உண்டு. இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போராட்டத்தை இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய தலைமுறை மாணவர்கள்தான் நடத்தினார்கள். அதை முன்னின்று நடத்திய அறிஞர் அண்ணா, இப்போதைய பஸ் டே ரகளை நடந்த அதே பச்சையப்பன் கல்லூரியில்தான் படித்தார் நண்பா!
ஒரு வருடத்துக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டு வீசிக் கொன்று ஒழிக்கப்பட்டபோது, தமிழகத்தில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. அவற்றை முன்னின்று நடத்தியவர்களும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர்களும் நம்மைப் போன்ற மாணவர்கள்தானே நண்பா. செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர் கள் ஏழு நாட்களுக்கும் மேலாக உண்ணா விரதம் இருந்தார்கள். தங்களின் சுய நலன்களுக்காக அல்ல; இலங்கையில் தமிழர்கள் மீதான யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக!
இதோ கண் முன்னால் ஒரு தேர்தல் வரப்போகிறது. அநேகமாக கல்லூரி வாசல் மிதித்த பலர் வாக்கு அளிக்கவிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாக இருக்கும். என்ன செய்யப்போகிறீர்கள்? 'அரசியல் ஒரு சாக்கடை’ என ஒதுங்குவதா, அல்லது 'இன்னும் கொஞ்சம் போட்டுக்கொடுங்க’ என ஓட்டுக்கு வாங்கும் பணத்துக்குப் பேரம் பேசுவதா... இரண்டுமே உங்கள் கையில்தான்!
ஆனால், 'ஜனநாயகம்’ என்பது வாக்கு அளிக்கும் உரிமை மட்டுமே அல்ல. உணவு, உறைவிடம், கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாம் எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். ஃபுட்போர்டில் தொங்கத் தேவை இல்லாத அளவுக்குச் சரியான எண்ணிக்கையில், முறையான பேருந்து வசதியைப் பெறுவதும்கூட ஒரு ஜனநாயக நாட்டுக் குடிமகனின் உரிமைதான். இவை ஏன் எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்று கேள்வி கேட்டு, அதற்கான விடை தேடி செயலில் இறங்கும்போதுதான் உண்மையும் உலகமும் புரியும்!
போதும் நண்பா... நாம் வாகனங்களில் ஆடியது. இனியாவது, வாழ்வைக் கொண்டாட வா நண்பா!
இப்படிக்கு உன்னால் அழ நேர்ந்த ஒரு நண்பன்!

சனி, 22 ஜனவரி, 2011

அன்பு நண்பனுக்கு

தோல்விகள் மலையென குவிந்த பின்பு,
சொந்தங்கள் சோகங்களான பின்பு,
முயற்சிகள் முற்றும் துறந்த பின்பு,
உலகத்திற்கும் தனக்கும் விவாகரத்தான பின்பு,
சுவாசிப்பது பெரும் பணியான பின்பு,
வாழ்வின் அர்த்தம் அபத்தமான பின்பு,
எதற்கு வாழ்க்கை என்றான பின்பு,

என் அன்பு நண்பனுக்கு,
நான் சொல்ல நினைப்பது...

ஒரு முறை
வெற்றிகளின் மலையை அடைந்திட .. ,

சொந்தங்களை சந்தோஷங்களாக்கிட.. , 
முயற்சிகள் புன்னகையில் முடிந்திட.. ,
உலகத்தை தன்னுள் உணர்ந்திட..,
சுவாசிப்பதை செயலில் மறந்திட, 
வாழ்வின் பொருள் "நீ" என்றுணர்ந்திட,

இன்று நீ புதிதாய் பிறந்தாய் என எண்ணிக்கொள் , 
இந்த நண்பன் ..தோள் கொடுத்திட,. வாழ்வின் கை பற்றிக்கொள்!!

வியாழன், 20 ஜனவரி, 2011

வாழ்வில் வென்றிட

வாழ்வில் வென்றிட வேதாத்ரி மகரிஷி சொன்ன ரகசியம்... :-)

"முடியும்! முடியும்! என்னால் முடியும்,
முயற்சி செய்தால் எதுவும் முடியும்,

வாழ்வேன்! வாழ்வேன்! சிறப்பாய் வாழ்வேன்,
வாழ்வேன்! வாழ்வேன்! என் மனம் ஒன்றி வாழ்வேன்,

தருவேன்! தருவேன்! அள்ளித் தருவேன்,
அன்பையும் கருணையும் அள்ளித் தருவேன்,

நான் தன்னம்பிக்கை மிக்கவன்,
நான் ஆற்றல் மிக்கவன்,
நான் சக்தி மிக்கவன்,
நான் சுறுசுறுப்பானவன்,
நான் சந்தோஷமானவன்,
நான் கனவுகளை நிஜமாக்குபவன்,

முடியும்! முடியும்! என்னால் முடியும்,

முயற்சி செய்தால் எதுவும் முடியும்,

வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்!
வாழ்க வளமுடன்!"

என்பதை இரவு தூங்கும் முன்பும், காலை எழுந்தவுடனும் 1 வருடம் தொடர்ந்து சொன்னால்.... வாழ்வில் வெற்றி நிச்சயமாம்!!!

இதை முயற்சி செய்து , உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!!


திங்கள், 10 ஜனவரி, 2011

உழவர் திருநாள் - உதவி திருநாள்

ஏழை விவசாய குடும்பங்கள் உழவர் திருநாள் கொண்டாடிட...
நாம், ஆளுக்கோர் ஏழை விவசாய குடும்பத்தை தத்தேடுத்தால் என்ன??

உங்கள் கருத்து.. ??

விவசாயிகளுக்கென்று இயங்கும் நிறுவனங்கள் இதனை செய்கின்றனவா??
விவசாயிகளை நேரடியாக சென்றடையும் தளங்கள் ??

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!


ஆனந்த விகடனில் வெளியான .... நாஞ்சில் நாடன் பேட்டியின் ஒரு பகுதி....


''சினிமா மட்டும்தான் தமிழ் கலாசாரத்துக்கு அபாயமானதா என்ன?''
''கலாசாரம் என்பது எப்போதும் நிலையான ஒன்று இல்லை. அது மாறிக்கொண்டே இருப்பது. ஆனால், மரபைக் கணக்கில் எடுக்காத கலாசார மாற்றம் பாழ். அற மதிப்பீடுகளும் ஒழுக்க விழுமியங்களும்தான் ஒரு பண்பாட்டின் வேர்கள். தமிழ் சினிமாதான் தமிழ் சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. தமிழ் சமூகம் அளவுக்குச் சினிமாவின் கேடுகளை உள்வாங்கிக்கொண்ட சமூகம் வேறு எதுவும் கிடையாது. அதுபோக, அரசியலும் ஊடகமும் கல்வியும் நம் சமூகத்தை நாசம் செய்துகொண்டு இருக்கின்றன. கறிக்கோழியை வளர்ப்பதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெற்றோர்களிடம் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பிராய்லர் கோழியை வளர்ப்பதைப்போல பிள்ளைகளை வளர்த்தால், அந்தச் சமூகம் எப்படி உருப்படும்? படிப்பு, வேலை இதைத் தவிர, மனித வாழ்க்கைக்கு அர்த்தங்களே இல்லையா? குறிக் கோள்களே இல்லையா? நமது சமூகம் எப்படி மதிப்பீடுகளை இழந்துகிடக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் எனக்கு பி.எஸ்.என்.எல்லில் இருந்து ஒருதொலை பேசி அழைப்பு. எடுத்துப் பேசினால், 'ஹாய், மச்சான் சௌக்கியமா?’ என்றது. அது ஒரு பதிவு செய்யப்பட்ட குரல். எதிர்முனையில் இருப்பவர் யார்?  எழுத்தாளரா, கொலைகாரரா, ஆசிரியரா, நோய்வாய்ப்பட்டவரா, அவருக்கு என்ன வயது இருக்கும் என்று எந்தக் குறைந்த பட்ச அறிவும் இல்லாமல் கூவுகிற வியாபாரக் குரல்கள் என்னை இம்சை செய்கின்றன!''

''இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே?''

''உண்மைதான். தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம். ஆனால், இப்போது உள்ள மாணவர்களோ, 'மானாட மயிலாட’ பார்ப்பதற்குச் செலவழிக்கும் மணித் துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு, இன்று எந்தத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதிகூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள். நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?
இன்று ஸ்பெக்ட்ரமில்  1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம். ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன்.

எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

கடைசி கடிதம் எப்போது??

என் தாய் தந்தைக்கு... கைப்பட எழுதிய சில வரிகள்..  
வாழ்வில் முதல் முறை புத்தாண்டு வாழ்த்தின் அர்த்தம் உணர்ந்தேன்...

நீங்கள் கடைசி முறை கைப்பட கடிதம் எழுதியது எப்போது??