கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கடிதம்...
இந்த 'பஸ் டே’ கலாசாரம் முதலில் எப்படி வந்தது நண்பா? கல்லூரி வந்து செல்ல பெரும்பாலான மாணவர்களுக்கு பேருந்து மட்டுமே வாகனமாக இருந்த காலத்தில், அந்தப் பயணம் அனைவருக்கும் மிக இனிய நினைவுகளை வழங்கியது. சில கிலோ மீட்டர் பயணத்தில் எத்தனை எத்தனை நட்புகள், காதல்கள். பேச்சும், சிரிப்பும், பாட்டும், கும்மாளமுமாக அந்த இளமையின் துள்ளலை மற்ற பயணிகளும் ஏக்கத்துடன் ரசித்தனர். இப்படி ரம்மியமான நினைவுகளை வழங்கிய பேருந்துக்கு மரியாதை செய்யும் விதமாகவே பஸ் டே கொண்டாட்டங்கள் தொடங்கின. ஆனால் நண்பா, அண்மை வருடத்தைய நிகழ்வுகள் அப்படி இனிமை நினைவுகளையா தருகின்றன?
வாகனங்கள் நகர்ந்து செல்லும் மாநகரச் சாலைகளில் பெருங்கூட்டமாகத் திரண்டு பேருந்தின் மீது ஏறி உற்சாகம் பொங்க நீங்கள் வருகிறீர்கள். அலங்கரிக்கப்பட்ட தேர்போல, அந்த நகரப் பேருந்து போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து வருகிறது. வெளியில் சாலை நடுவே விசில் சத்தமும், கூச்சலும், பாட்டும், ஆட்டமும் தூள் பறக்கிறது. சுற்றியிருக்கும் யார் பற்றியும் உங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் நண்பா, அந்த பேருந்தை ஓட்டிவரும் ஓட்டுநருக்கு கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகனோ, மகளோ இருக்கக்கூடும். டிராஃபிக்கில் சிக்கித் தவிப் பவர்களில் உங்கள் அப்பாவின், அம்மாவின் சாயலில் ஆயிரம் பேர் இருப்பார்கள். உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் உங்கள் முகங்களில் தங்கள் பிள்ளைகளின் சாயல்களையே காண்கிறார்கள் நண்பா. எங்கெங்கோ படித்துக்கொண்டு இருக்கும் மகள்/மகன்களின் முகங்கள் கவலையோடு அவர்களின் மனங்களில் வந்து போகும். அன்று இரவு அவர்களுக்கு உறக்கம் வராது நண்பா! அதே டிராஃபிக் நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் நிற்கும் கூட்டத்தில் பீட்ஸா கார்னரில் வேலை பார்க்கும் இளைஞர்களும் உண்டு. அவர்களில் பலர், பகலில் பீட்ஸா டெலிவரி செய்து மாலைக் கல்லூரிகளில் படிப்பவர்கள். ஐந்து நிமிட தாமதத்தில் அவர்களின் ஒருநாள் சம்பளம் கானல் நீராகும் வேதனை உங்களுக்குப் புரியுமா நண்பா?
கல்லூரிப் பருவம் கொண்டாட்டங்கள் நிறைந்தது, கொண்டாடப்பட வேண்டியது. அன்றாட வாழ்க்கையே கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். ஏனெனில், ஒவ்வொரு நாளும் புதிய புதிய நெருக்கடிகள் நம்மைச் சூழ் கின்றன. அவற்றைக் கண்ணீரால், கோபத்தால் எதிர்கொள்வதைக் காட்டிலும்... கொண்டாட்டத்தால் எதிர்கொள்வதே சிறந்த வழி. ஆனால் நண்பா, நமது கொண்டாட்டம் என்பது சுற்றிஇருப்பவர்களுக்குத் துன்பங்களைப் பரிசளிக்கலாமா? அடுத்தவர்களைத் தொந்தரவு செய்து, அவர்களின் வேலைகளைக் கெடுத்து, நடு ரோட்டில் நிற்கவைத்து, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? 'முடியும்’ எனில், அது ஆரோக்கியமான மனநிலையா? பிறரை இம்சித்து இன்பம் காண்பது மன நோய்க்கான ஆரம்ப அறிகுறி அல்லவா?
அண்மையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பஸ் டே கொண்டாட்டம் பெரும் கலவரமாக முடிந்ததை அறிவாய் நண்பா. காவலுக்கு வந்த காவலர்கள் மீது கற்கள் எறிந்து காயப்படுத்தி இருக்கிறார்கள் மாணவர்களின் மாண்பு உணராத சிலர். கல்லூரி வளாகம் எங்கும் கற்களும், கட்டைகளும், செருப்புகளும் சிதறிக்கிடக்கின்றன. 'ஸ்டூடன்ட் பவர்னா என்னன்னு தெரியுமா?’ எனப் பல சினிமாக்களில் நாம் வீர வசனங்கள் கேட்டிருக்கிறோம். இதுதானா அந்த ஸ்டூடன்ட் பவர்? இப்படி ஒரு ஸ்டூடன்ட் பவர் நமக்கு அவசியமா நண்பா?
உண்மையில் 'மாணவர் சக்தி’ என்பதற்கு அண்மைக் கால உதாரணம், ஆந்திராவின் உஸ்மானியப் பல்கலைக்கழக மாணவர்கள்! பல வருடங்களாக நீடித்து வரும் ஆந்திரா - தெலுங்கானா போராட்டம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் குறிப்பிடத்தகுந்த பங்களிப் பைச் செலுத்திய உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வருடம் மிகத் தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். எதற்கும் அஞ்சவில்லை, விட்டுக்கொடுக்கவில்லை. இறுதியில் மத்திய அரசு தனித் தெலுங்கானா அறிவிப்பை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்போது அந்த அறிவிப்பை செயல்படுத்தக் கோரி போராடுவதும் அதே மாணவர்கள்தான் நண்பா. இதன் பொருட்டு அவர்கள் போலீஸின் அடக்குமுறைகளை நடு வீதிக்கு வந்து நேருக்கு நேர் எதிர்கொள்கின்றனர். ஆனால், நீங்கள் செய்வது என்ன நண்பா? பாதுகாப்புக்கு வரும் போலீஸ் மீது கல் எறிந்துவிட்டு, கல்லூரி வளாகத்துக்குள் ஓடி ஒளிந்து பதுங்கிக்கொள்கிறீர்கள். அந்தக் கல் சாலையில் செல்லும் அப்பாவியின் தலையைப் பதம் பார்க்கிறது. ஒருவேளை அந்த அப்பாவி உங்கள் அண்ணனாகவோ, அம்மாவாகவோ, தம்பியாகவோ இருந்தால்... உங்கள் சதை துடிக்குமா... துடிக்காதா?
பள்ளி-கல்லூரிகள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கோ, அநியாயமாக வழிப்பறி செய்யப்படும் கல்விக் கட்டணங்களை எதிர்த்தோ உங்கள் போராட்டங்கள் அமைந்துஇருந்தால், உங்கள் உணர்வுக்கு ஒட்டுமொத்தத் தமிழகமுமே தோள் கொடுத்திருக்குமே நண்பா?!
இந்த 'பஸ் டே’ கலாசாரம் சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் இவ்வளவு கிடையாதே! தெற்கில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் பஸ் டே ரகளைகளைப் பார்த்து அசூயை அல்லவா அடைகிறார்கள்? மாணவிகள் அச்சப்படுகிறார்கள். ஒட்டுமொத்த சென்னை மாணவர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என நினைக்கிறார்கள். வெளிப்படையாக, பச்சையாகச் சொல்வதெனில் உங்களை அவர் கள் 'பொறுக்கிகள்’ என நினைக்கிறார்கள். ஆனால், அதுவா உண்மை?
இந்த பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் அரசுக் கல்லூரிகளில் படிப்பவர்கள். அடிமட்ட, நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தின் பிள்ளைகள். எங்காவது இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டம் என்ற பெயரில் பஸ்ஸின் டாப்பில் ஏறி வெறியாட்டம் ஆடுகிறார்களா? அவர்கள் விரும்பினாலும் முடியாது. அவர்களுக்கு கல்லூரிப் பேருந்து இருக்கிறது. அதற்குள் ஒரு விசில் அடித்தாலே, அடுத்த நாள் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள். மாணவப் பருவத்தின் கொண்டாட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு பிராய்லர் கோழிகளைப்போல தான் பராமரிக்கப்படுகின்றனர் தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள். ஆனால், அவர்களுக்கு வளமான குடும்பப் பின்னணி இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு எம்.என்.சி. வேலைக்கு உத்தரவாதம் உண்டு. ஆனால், உங்கள் குடும்பப் பின்னணி அப்படியா நண்பா?
உண்மையில் உங்களுக்கு இந்த நிலை கோபத்தைத்தான் உண்டாக்க வேண்டும். பணம் படைத்தவனுக்குத் தரமான கல்வி, பணம் இல்லாதவனுக்கு நாலாம் தரக் கல்வி என்ற இந்தக் கேடுகெட்ட கல்விமுறை மீது கோபம் வர வேண்டும். கல்விக் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்கும் மோசடித் தனத்துக்கு எதிராகக் கோபம் வர வேண்டும் நண்பா. சாராய வியாபாரிகளும், மணல் கொள்ளையர்களும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும், ஊழல்வாதிகளும் 'கல்வித் தந்தைகளாக’ வலம் வரும் அவலத்துக்கு எதிராகக் கோபம் வர வேண்டும் நண்பா. ஏனெனில் இந்தக் கல்வி அமைப்பு மாணவர்களை மிக நேரடியாகப் பாதிக்கிறது. பணக்காரர்களை பணக்காரர்களாகவும், ஏழைகளை ஏழைகளாகவும் தொடர்ந்து பராமரிப்பதில் இந்தக் கல்வி அமைப்புக்கு முக்கிய பாத்திரம் உண்டா, இல்லையா?
ஆல்காட்டுக் குப்பம் திவ்யாவை ஞாபகம் இருக்கிறதா நண்பா? சென்னை பெசன்ட் நகர் அருகே உள்ள குப்பத்தின் குடிசையில் இருந்து எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் படிக்கச் சென்ற ஏழைப் பெண். யாரோ ஒரு மாணவியின் பணம் வகுப்பறையில் திருடுபோய்விட்டது என கல்லூரி நிர்வாகம் எல்லா மாணவிகளையும் சோதனை செய்தது. ஆனால், ஏழை சகோதரி திவ்யாவை மட்டும் நிர்வாணப் பரிசோதனை செய்தது. அந்த அவமானம் தாங்காமல் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். திவ்யா செய்த குற்றம் என்ன நண்பா? அவள் ஏழையாகப் பிறந்ததும், படிக்க ஆசைப்பட்டதும் மட்டும்தான் குற்றம். 'ஏழைகள் என்றால் திருடுவார்கள்’ என்ற அசிங்கமான பொதுப் புத்தி திவ்யாவின் உயிரைப் பறித்தது. இதைத் தற்கொலை என்பீர்களா? இல்லை நண்பா, இது இந்த அநீதியான கல்வி முறை செய்த பச்சைப் படுகொலை! உங்கள் சக மாணவியின் உயிர் பறிக்கப்பட்டதற்கு எதிராக நீங்கள் என்ன செய்தீர்கள்? ஓர் அஞ்சலிக் கூட்டத்துக்கேனும் அனைத்துக் கல்லூரி மாணவர் களும் திரண்டு இருக்க வேண்டாமா நண்பா? ஓர் இடத்தில் கூடி நின்று, ஒரே குரலில் அதிகார மையத்தை உலுக்கி எடுத்திருக்க வேண்டாமா நண்பா? கொண்டாட்டம் என்பது பேருந்தின் உச்சியில் ஏறி ஆட்டம் போடுவது அல்ல. அநீதிக்கு எதிராக போர்க் குணத்துடன் போராடுவதுதான் உண்மையான கொண்டாட்டம் நண்பா!
இப்படிப்பட்ட மாணவர் போராட்டத்துக்கு நீண்ட நெடிய வரலாறு நம் தமிழகத்திலேயே உண்டு. இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போராட்டத்தை இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய தலைமுறை மாணவர்கள்தான் நடத்தினார்கள். அதை முன்னின்று நடத்திய அறிஞர் அண்ணா, இப்போதைய பஸ் டே ரகளை நடந்த அதே பச்சையப்பன் கல்லூரியில்தான் படித்தார் நண்பா!
ஒரு வருடத்துக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டு வீசிக் கொன்று ஒழிக்கப்பட்டபோது, தமிழகத்தில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. அவற்றை முன்னின்று நடத்தியவர்களும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர்களும் நம்மைப் போன்ற மாணவர்கள்தானே நண்பா. செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர் கள் ஏழு நாட்களுக்கும் மேலாக உண்ணா விரதம் இருந்தார்கள். தங்களின் சுய நலன்களுக்காக அல்ல; இலங்கையில் தமிழர்கள் மீதான யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக!
இதோ கண் முன்னால் ஒரு தேர்தல் வரப்போகிறது. அநேகமாக கல்லூரி வாசல் மிதித்த பலர் வாக்கு அளிக்கவிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாக இருக்கும். என்ன செய்யப்போகிறீர்கள்? 'அரசியல் ஒரு சாக்கடை’ என ஒதுங்குவதா, அல்லது 'இன்னும் கொஞ்சம் போட்டுக்கொடுங்க’ என ஓட்டுக்கு வாங்கும் பணத்துக்குப் பேரம் பேசுவதா... இரண்டுமே உங்கள் கையில்தான்!
ஆனால், 'ஜனநாயகம்’ என்பது வாக்கு அளிக்கும் உரிமை மட்டுமே அல்ல. உணவு, உறைவிடம், கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாம் எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். ஃபுட்போர்டில் தொங்கத் தேவை இல்லாத அளவுக்குச் சரியான எண்ணிக்கையில், முறையான பேருந்து வசதியைப் பெறுவதும்கூட ஒரு ஜனநாயக நாட்டுக் குடிமகனின் உரிமைதான். இவை ஏன் எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்று கேள்வி கேட்டு, அதற்கான விடை தேடி செயலில் இறங்கும்போதுதான் உண்மையும் உலகமும் புரியும்!
போதும் நண்பா... நாம் வாகனங்களில் ஆடியது. இனியாவது, வாழ்வைக் கொண்டாட வா நண்பா!
இப்படிக்கு உன்னால் அழ நேர்ந்த ஒரு நண்பன்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக