கரண்ட் கட்!!
ஜெனரேட்டர் ஆட்சியில்
ஜெ முதல் மந்திரி
மின்மினி வெளிசத்தை
நகர குழந்தைகள் ரசிக்க செய்யும்
நிலவின் ஒளியை
மீண்டும் கவனிக்க செய்யும்
உழைக்காதவரையும்
வியர்வை சிந்தவைக்கும்
படித்தவரை
புத்தகம் மறக்க செய்யும்
21 ஆம் நூற்றாண்டிலும்
கற்காலம் தலை காட்ட வைக்கும்
ஆனால்
டாஸ்மாக் பக்கம் மட்டும்
கூட்டம் குறைக்க தடுமாறும்
:-)
தமிழக அரசின் இப்போதைய இரண்டு கண்கள் - டாஸ்மாக் , மின்சாரம்
கரண்ட் கட்!!
அம்மாக்களுக்கு கிரிகெட்டிலிருந்தும்
அப்பாக்களுக்கு மெகா தொடரிலிருந்தும்
பிள்ளைகளுக்கு செய்திகளிலிருந்தும்
விடுதலை !
செவ்வாய், 27 மார்ச், 2012
கரண்ட் கட்!!
லேபிள்கள்:
கரண்ட் கட்,
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
Current Cut,
Kanavil Nijam,
Tamil,
Thought
திங்கள், 19 மார்ச், 2012
பிரதமருக்கு ஒரு கடிதம் - தமிழருவி மணியன்
பிரதமருக்கு ஒரு கடிதம் - தமிழருவி மணியன்
அன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு... வணக்கம்!
இந்திய ஜனநாயகம் இந்த எளியவனுக்கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன்.
தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர்கள். ஒன்றுபடுவது ஞானம், வேறுபடுவது அஞ்ஞானம் என்ற வாழ்வியல் விழுமியத்தை, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற வேத வாசகத்தின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர்கள். இந்தியாவின் ஓர் அங்கமாக இவர்கள் இருப்பதே இந்த மண்ணின் மகத்தான பெருமை என்பதை மத்திய அரசுக்குத் தலைமை ஏற்றிருக்கும் நீங்கள் முதலில் உணர வேண்டும்.
எங்கள் போற்றுதலுக்குரிய பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று குரல் கொடுத்தார். நாங்கள் செவிசாய்க்கவில்லை. அன்பிற்கினிய அண்ணா, 'திண் ணையில் அமர்ந்தாவது திராவிட நாடு கேட்பேன்’ என்று மேடைதோறும் முழங்கினார். அவரை நாங்கள் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தோம். ஆனால், அவருடைய பிரிவினைக் கோரிக்கையை நிரா கரித்தோம். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், 'சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தமிழரசு காண்போம்’ என்று எங்கள் கைகளைப் பிடித்து வேண்டினார். தேசிய மயக்கத்தில் இருக்கும் நாங்கள் அவரைத் திரும்பிப் பார்க்கவும் மறுத்தோம். இன்றும், 'தமிழ்த் தேசியம்’ பேசுபவர்களை நாங்கள் பெரிதாக ஆதரித்து விடுவது இல்லை. இன்றுவரை இந்தியராய் இருப்பதற்கு நாங்கள் கொடுத்திருக்கும் விலை மிக அதிகம். ஆனால், இறுதிவரை நாங்கள் இந்தியராய் நீடிப்பது இனி உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்ஆப்பிரிக்காவில் மகாத்மாவாக மலர்ந்ததற்கு முதற்காரணம் தமிழர்கள். 'அடுத்த பிறவியில் வள்ளுவத்தை வாசிப்பதற்காகத் தமிழனாய்ப் பிறக்க விரும்புகிறேன்’ என்றார். இந்தியாவைவிட்டு வெளியேறி அந்நிய மண்ணில் வெள்ளையருக்கு எதிராக நேதாஜி படை திரட்டியபோது, அவருக்குப் பின்னால் வெள்ளமெனத் திரண்டவர்கள் தமிழர்கள். அதனால்தான், 'இன்னொரு பிறவி இருந்தால் தமிழனாய்ப் பிறக்கும் வரம் எனக்கு வாய்க்க வேண்டும்’ என்றார் அந்த வீரத்தின் விளைநிலம். ஆனால், உங்கள் அரசோ தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவதையே ஆட் சிச் சாதனையாக அரங்கேற்றி வருகிறது.
விடுதலை வேள்வியில் நாட்டு மக்கள் ஈடுபட்டிருந்தபோது, மாநில உரிமைகள் பற்றி ஆயிரம் வாக் குறுதிகளை அன்றைய காங்கிரஸ் தலைமை அள்ளி வழங்கியது. 'ஒவ்வொரு மாநிலமும் பரிபூரண சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். மாநிலங்கள் விரும்பி விட்டுக்கொடுக்கும் அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும்’ என்று இடை விடாமல் வலியுறுத்தினார் மகாத்மா. புதுடெல்லி யில் 2.4.1942 அன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு, 'ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களை அவர்களுடைய விருப்பத்துக்கு எதிராக இந்திய ஒன்றியத்தில் இருக்கும்படி வற்புறுத்த விரும்பவில்லை’ என்று தீர்மானம் தீட்டியது. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களை மாண்புமிகு மாநகராட்சிகளாக மாற்றிவிட்டது. இந்தியராய் இருப்பதற்கு எங்கள் உரிமைகளை இழந்து நின்றோம். எதிர்த்துப் போர்க்கொடி பிடிக்கவில்லை.
சுதந்திர இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தெலுங்கர்கள் 'விசால ஆந்திரா’ வேண்டும் என்றனர்; கன்னடர் 'சம்யுக்த கர்னாடகா’ என்று குரல் கொடுத்தனர். மலையாளிகள் 'ஐக்கிய கேரளா’ என்ற கோரிக்கை வைத்தனர். இந்தியராய் இருக்க விரும்பிய நாங்களோ அகன்ற தமிழகத்துக்கு ஆசைப்படவில்லை. சித்தூர், புத்தூர், திருப்பதி, திருக்காளத்தி ஆகிய தமிழர் பகுதிகளைத் தெலுங்கருக்குத் தாரை வார்த்தோம். மாதேசுவரன் மலை முதல் நந்திமலை வரை வாழ்ந்த நிலப் பரப்பையும், பெங்களூரு முதல் தங்கவயல் வரை சொந்தமான தமிழர் மண்ணையும் எங்கள் கன்னட சகோதரர்களுக்குச் சீதனமாகத் தந்து மகிழ்ந்தோம். ஏராளமான ஆறுகள் பெருக்கெடுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை, 'குளமாவது? மேடாவது? எல்லாம் இந்தியாவில்தானே இருக்கின்றன’ என்று தேசியத் தத்துவம் பேசி மலையாளிகளுக்கு 'மொய்’ எழுதிவிட்டு, இன்று முல்லை - பெரியாறு அணைக்காக அழுதுகொண்டு இருக்கிறோம். பிரதமரே... இவ்வளவு இழப்புகளும் எதற்காக? இந்தியராய் தமிழர் இருப்பதற்காக!
பிரிட்டனின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டு 1948 பிப்ர வரியில் சுதந்திரம் அடைந்து ஆறு மாதங்கள் ஆவதற்கு முன்பே காடாய், மேடாய், களர்நிலமாய் இருந்த மத்திய மேட்டு நிலத்தை ரப்பர், காபி, தேயிலைத் தோட்டங்களாக மாற்றி இலங்கையின் பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்குத் தங்கள் வியர் வையை, ரத்தத்தைச் சிந்திய எங்கள் தாயகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து, ஆதரவற்ற அனாதைகளாக்க முதல்பிரதமர் டி.எஸ்.சேனநாயகா மூன்று மசோதாக்களை இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க முயன்றபோது, நேருவின் மத்திய அரசு மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. மலையகத் தமிழர்களின் உரிமை காக்க 1939-ல் 'இலங்கை இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்து வைத்ததே நேருதான் என்பது எவ்வளவு பெரிய இயற்கை முரண்!
விடுதலை பெறுவதற்கு முன், இலங்கை நாடாளுமன்றத்தில் எட்டு உறுப்பினர்களையும், 'செனட்’ எனப்படும் மூத்தோர் அவையில் இரண்டு உறுப் பினர்களையும் பெற்றிருந்த இந்தியத் தமிழர்கள், ஒரு நொடியில் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இந்த அநீதியை எதிர்க்காமல், அவர்களை அகதிகளாக்க 1964-ல் சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தத்தை இந்திய அரசு அங்கீகரித்து, ஐந்து லட்சம் தமிழர்களைத் திரும்ப அழைத்து நடுத்தெருவில் நிறுத்தி நிலைகுலையச் செய்த போதும், நாங்கள் ஈர விழிகளுடன் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம், 'இந்தியர்’ என்ற மகுடத்தை இழந்து விடாமல் இருக்க!
தமிழகத்தின் தென்பரப்பில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள கச்சத்தீவு எங்க ளுக்குச் சொந்தமானது. பல நூற்றாண்டுகளாக ஒரு தேசியஇனத்துக்குச் சொந்தமான நிலப்பரப்பை, அந்த இனத்தின் அனுமதி இன்றிப் பக்கத்து நாட் டுக்குப் பரிசாய் வழங்கும் பாதகச் செயலை எந்த அரசும் செய்யத் துணியாது. ஆனால், இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி தன்னுடைய சீதனப்பொருளை அடுத்தவருக்குத் தருவது போல் திருமதி பண்டாரநாயகாவிடம் 1974-ல் கச்சத்தீவை ஒப்படைத்தது எந்த வகையில் நியாயம்?
காங்கிரஸை 1969-ல் தன் சுயநலத்துக்காக இரண்டாகப் பிளந்த இந்திரா காந்தியின் குடும்ப அரசியலை, அன்று தொட்டு எதிர்த்த கூட்டத்தில் நான் ஒருவன். இந்திரா காந்தியின் எந்த அரசியல் நிலைப் பாட்டையும் ஏற்றவன் இல்லை நான். உலகின் மீன் வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான கச்சத்தீவை நேருவின் மகள் சட்ட வரம்பை மீறி இலங்கையிடம் சமர்ப்பித்த போதும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு நிறுத்திக் கொண்டோம். ஏன்..? இந்தியராய் இருப்பதற்கு!
இந்தியப் பிரதமரே... உலகில் உள்ள கடற்கரை நாடுகள் அனைத்திலும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது உண்டு. எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று சொல்லி எந்த நாட்டுக் கடற்படையும் மீனவரைச் சுடுவது இல்லை. நம் பகை நாடான பாகிஸ்தான்கூட, குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராப் பகுதியில் மீன்பிடிக்கும் இந்தியரை எல்லை தாண்டியதாக ஒரு முறையும் சுட்டது இல்லை. ஒருவரையும் கொன்றது இல்லை. உலகிலேயே மீனவரைச் சுட்டுக் கொல்லும் ஈனச் செயலை இலங்கை மட்டும்தான் இன்று வரை செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழகத்து மீனவரை - அதாவது நம் 'இந்திய’ மீனவரை ஊனப்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களின் - அதாவது 'இந்திய’ மீனவர்களின் உயிர் குடித்த இலங்கை அரசுக்கு வெண்சாமரம் வீசும் வேலையில் உங்கள் அரசு ஆனந்தம் அடைவதைப் பார்த்தும் நாங்கள் ஆத்திரப்படவில்லை. 'தேசியஉணர்வு’ எங்களைத் தேம்பி அழச் செய்வதோடு தடுத்து விடுகிறது; எங்கள் முதல்வர்களை உங்களுக்குக் கடிதம் எழுதுவதோடு நிறுத்தி விடுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்கள் உயர் தமிழுக்கு வட்டார மொழிக்குரிய தகுதியைத்தான் தந்திருக்கிறது. 'இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட மொழியே உயர்தனிச் செம்மொழி’ என்று மொழியியல் அறிஞர்கள் வைத்திருக்கும் வரையறையைப் புறந்தள்ளி, எங்கள் தமிழோடு கன்னடமும் தெலுங்கும்கூட 'உயர் தனிச் செம்மொழிகள்’ என்று அங்கீகரித்திருக்கும் உங்கள் 'அரசியல்’ நியாயமானது என்று எந்த நேர்மை யாளரும் ஏற்க முடியாது.
இந்தியைப் போன்று தமிழும் தேசத்தின் ஆட்சி மொழி அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று மதுரை ஒத்தக்கடை வீதியில் நாங்கள் ஓங்கிக் குரல் கொடுப்பதற்கு மேல் எதையும் செய்ய மாட்டோம். எங்களுக்குத் தமிழா முக்கியம்? 'இந்தியர்’ என்ற அடையாளம் அல்லவா அதிமுக்கியம்!
போகட்டும். இந்தியராய் இருப்பதற்கு இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்து விட்டோம். எங்கள் இனம் ஈழத்தில் அழிவதற்கு இலங்கை அரக்கரிடம் ஆயுதம் அளித்தீர்களே... அதைப் பொறுத்தோம். முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர் பலியிடப்பட்ட போதும் ராஜபக்ஷேவுக்கு டெல்லியில் 'ரத்தினக் கம்பள வரவேற்பு’ வழங்கி ரசித்தீர்களே... அதையும் பொறுத்தோம். முள்வேலிக் கம்பிகளுக்கிடையில் மூன்று லட்சம் தமிழர் முடக்கப் பட்டபோது, இலங்கை அரக்க அரசுக்கு 1,000 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துக் கொலைகாரக் கூட்டத்தையே மறுவாழ்வு தரும்படி வேண்டி நின்றீர்களே... அதையும் பொறுத்தோம்.
'உயிரினும் சிறந்தன்று கற்பு’ என்று போற்றி வாழ்ந்த எம் குலப் பெண்களைச் சிங்களர் வன்புணர்ச்சி செய்து வதைத்த செய்தி வந்ததே... அதையும் பொறுத்தோம். பிரிட்டனின் 4-வது சேனலில், எம் இனத்தவரை எட்டி உதைத்து, கைகளைப் பின்னால் கட்டி, கண்களைத் துணியில் மறைத்துச் சுட்டு வீழ்த்திய மனிதகுல அநாகரிகத்தைக் கண்டபோதும் பொறுத்துக்கொண்டோம். இன்னமும் பொறுப்பதற்கு என்ன இருக்கிறது பிரதமரே?
தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று 24 நாடுகளின் ஆதரவோடு ஐ.நா-வில் சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானத்தை முறியடிக்க இந்திய அரசு முனைந்தது நியாயந்தானா? இன்று, ஜெனிவாவில் மனித உரிமைகள் அமைப்பின் முன் இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை உங்கள் அரசு ஆதரிக்கத் தயங்குவது நாகரிக அரசின் நல்ல அடையாளமா? அபிசீனீயா மீது ஆக்கிரமிப்பு நடத்தியதற்காக, ரோமாபுரியில் விமானத்தில் வீற்றிருந்த நேருவை விருந்தோம்ப வருந்தி அழைத்த முசோலினியைச் சந்திக்க மறுத்த ஆசியஜோதி அமர்ந்து ஆட்சி நடத்திய நாற்காலியில் நீங்கள் அமர்ந்து இருப்பதை மறந்து விட்டீர்களா?
ஈழப்போரில் இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து பிரிட்டன் குரல் கொடுக்கும் என்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தது உங்கள் செவிகளில் சேரவில்லையா? 'சேனல் 4 ஒளிப்பதிவைக் கண்டு உறைந்து போய்விட்டேன்’ என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் சொன்னது உங்கள் சிந்தையில் பதியவில்லையா? ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கண்டனம் உங்கள் கண்களில் படவில்லையா?
மாண்புமிகு பிரதமரே... உங்கள் மனச்சான்றோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள். காஷ்மீர் தீவிரவாதி களை அழிக்க இந்திய ராணுவம் என்றாவது விமானத் தாக்குதல் நடத்தியது உண்டா? 'ஈழத் தமிழரும் இலங்கை மக்களே’ என்று சொல்லும் ராஜபக்ஷே அரசு சொந்த மக்கள் மீதே வான் வழியாக ரசாயனக் குண்டுகளைப் பொழிந்து பல்லாயிரவரைப் படுகொலை செய்தது மனித உரிமை மீறல் இல்லையா? இன அழிப்பு இல்லையா? சர்வதேசப் போர் விதிமீறல் இல்லையா? எந்த நாட்டுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டுவருவது இந்திய மரபு இல்லை என்று சொல்லி இந்த மண்ணின் பண்பாட்டுப் பெருமையைப் படுகுழியில் தள்ள எப்படி உங்கள் அரசுக்கு மனம் வந்தது?
'தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்’ என்றார் பெரியார். உண்மைதான். முல்லை-பெரியாறு, காவிரி, பாலாறு என்று எந்தப் பிரச்னையிலும் தமிழர் உரிமை நிலைத்திட 'இந்தியன்’ என்ற உணர்வு இதுவரை உதவவில்லை. 'ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தால், மம்தாவுக்கு அள்ளிக் கொடுப்போம். சாமரம் வீசவில்லை என்றால், 'தானே’ புயல் அழிவுக்கும் கிள்ளியே கொடுப்போம்’ என்று ஓரவஞ்சனையோடு நடக்கும் நியாயமற்ற உங்கள் அரசு எங்களுக்கு எதற்கு?
கட்சி ரீதியாக நாங்கள் பிரிந்துகிடந்ததுவரை எங்களை உங்களால் எளிதில் புறக்கணிக்க
முடிந்தது. இன்று உலகின் எட்டாவது அதிசயமாய் முதல்வர் ஜெயலலிதாவும், கலைஞரும், காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஈழத் தமிழரின் இன்னல் தீர்க்க ஒன்றுபட்டு நிற்கின்றனர். இலங் கைக்கு ஆதரவாக இந்திய அரசு இனி இருந்தால், தமிழ் நிலத்தில் காங்கிரஸ் கல்லறைக்குச் சென்று விடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் என்று சரித்திரம் படைத்த உங்களுக்கு அதுகுறித்துக் கவலைப்பட நேரம் இருக்காது. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலைப்பட்டாக வேண்டும்.
இந்தியஅரசு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து எங்களை முதலில் தமிழராகவும், முடிவில் இந்தியராகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் நம்பிக்கைக்குரிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழில் தீட்டப்பட்ட என் கடிதத்தின் சாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உங்களுக்குச் சொல்வார் என்று நம்புகிறேன்.
இனஉணர்வை மதித்து என்னை இந்தியனாக இருக்க விடுவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன்,
தமிழருவி மணியன்
லேபிள்கள்:
Junior Vikatan,
Letter to the Prime Minister,
Tamil
சனி, 21 ஜனவரி, 2012
3
உயிரே.. உயிரே
உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய்
இல்லையடி!!
அழகே அழகே..
உனை விட எதுவும்..
அழகில் அழகாய்..
இல்லையடி !!
உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய்
இல்லையடி!!
அழகே அழகே..
உனை விட எதுவும்..
அழகில் அழகாய்..
இல்லையடி !!
ஞாயிறு, 15 ஜனவரி, 2012
பொங்கல்??
ஒவ்வொரு நொடியும்.
கரும்பைப் போல் இனித்திட
கதிரவன் போல் ஒளிர்ந்திட
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..
இந்நாள்..
தினம் முன் விழித்து நம்மை எழுப்பும்
கதிரவனை முதுகில் தட்டிக்கொடுக்கும் நாள்
"தானே" கடந்து, தன் கடன் மறந்து, ஒரு நாள்
தன் கண்ணீர் மறக்க நினைக்கும் உழவர் திருநாள்
உண்ணும் உணவின் கதை விதைத்து
காணாமல் போகும் இவர்களை தேடும் நாள்
"உலக தொலைக்காட்சியில் முதன்முறை"யாக
பல வரலாற்றுகளை உருவாக்கும் நாள்..
சினிமா நடிகர்களும்,சாலமன் பாப்பையாவும்,
மட்டும் நம் உறவுகளான நாள்
நகர தீப்பெட்டி வீடுகளில் இன்டெக்ஷன் அடுப்பகளில்
குக்கர் திருநாள்
தமிழ் புத்தாண்டின் முதல் நாளா? இல்லையா?
என்ற குழப்பத்தை அரசியலாக்கும் நாள்
தமிழக அரசை வாழவைக்கும் டாஸ்மாக் கடைகளில்
குடிக்காரத் தமிழனின் தன்மான திருநாள்
இவை எதையும் யோசிக்காத , யோசிக்க நேரமில்லாத
இயந்திர வாழ்க்கையில் காரணம் மறந்து,
விடுமுறையாக மட்டும் பதிவான மற்றுமொரு நாள்!!
லேபிள்கள்:
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
திருநாள்,
பொங்கல்,
Kanavil Nijam,
Pongal,
Thought
சனி, 14 ஜனவரி, 2012
ஜருகண்டி
கோவில்
தன்னை சுற்றி உள்ள கடவுளை...
கூண்டுக்குள் வைத்து அழகு பார்க்க.
மனிதனின் யுக்தி..
கோவில்
மனிதனிடமிருந்து.. தன்னை காத்துக்கொள்ள..
இறை.. தேடிய.. தனிமை அறை
திருப்பதி கோவிலில்
அர்ச்சனை அபிஷேகங்களை விட..
கடவுள் அதிகம் கேட்கும் வார்த்தை
"ஜருகண்டி" !!
மனிதர்கள்
சிலர்..
கடவுள் முன் மட்டும் உத்தமனாய் நடித்து,
பொருள் கொடுத்து வரம் தேடும் ..வியாபாரிகள்
சிலர்...
கடவுளின் முன் பாவங்கள் என்பதே இல்லை
என்ற நம்பிக்கை உடைய.. பாவிகள்
சிலர்..
கடவுள்களையும் பாவங்களையும்... மனதில்.
சுமக்கும்.. உத்தமர்கள்...
பலர்..
கடவுள், பாவம், சக மனிதர்கள் - இவை எவற்றையும்..
கண்டு கொள்ளாத இயந்திரங்கள்...
லேபிள்கள்:
கடவுள்,
கனவில் நிஜம்,
கோவில்,
சிந்தனை,
தமிழ்,
மனிதன்,
ஜருகண்டி,
Kanavil Nijam,
Tamil,
Thought.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)