சனி, 22 ஜனவரி, 2011

அன்பு நண்பனுக்கு

தோல்விகள் மலையென குவிந்த பின்பு,
சொந்தங்கள் சோகங்களான பின்பு,
முயற்சிகள் முற்றும் துறந்த பின்பு,
உலகத்திற்கும் தனக்கும் விவாகரத்தான பின்பு,
சுவாசிப்பது பெரும் பணியான பின்பு,
வாழ்வின் அர்த்தம் அபத்தமான பின்பு,
எதற்கு வாழ்க்கை என்றான பின்பு,

என் அன்பு நண்பனுக்கு,
நான் சொல்ல நினைப்பது...

ஒரு முறை
வெற்றிகளின் மலையை அடைந்திட .. ,

சொந்தங்களை சந்தோஷங்களாக்கிட.. , 
முயற்சிகள் புன்னகையில் முடிந்திட.. ,
உலகத்தை தன்னுள் உணர்ந்திட..,
சுவாசிப்பதை செயலில் மறந்திட, 
வாழ்வின் பொருள் "நீ" என்றுணர்ந்திட,

இன்று நீ புதிதாய் பிறந்தாய் என எண்ணிக்கொள் , 
இந்த நண்பன் ..தோள் கொடுத்திட,. வாழ்வின் கை பற்றிக்கொள்!!

வியாழன், 20 ஜனவரி, 2011

வாழ்வில் வென்றிட

வாழ்வில் வென்றிட வேதாத்ரி மகரிஷி சொன்ன ரகசியம்... :-)

"முடியும்! முடியும்! என்னால் முடியும்,
முயற்சி செய்தால் எதுவும் முடியும்,

வாழ்வேன்! வாழ்வேன்! சிறப்பாய் வாழ்வேன்,
வாழ்வேன்! வாழ்வேன்! என் மனம் ஒன்றி வாழ்வேன்,

தருவேன்! தருவேன்! அள்ளித் தருவேன்,
அன்பையும் கருணையும் அள்ளித் தருவேன்,

நான் தன்னம்பிக்கை மிக்கவன்,
நான் ஆற்றல் மிக்கவன்,
நான் சக்தி மிக்கவன்,
நான் சுறுசுறுப்பானவன்,
நான் சந்தோஷமானவன்,
நான் கனவுகளை நிஜமாக்குபவன்,

முடியும்! முடியும்! என்னால் முடியும்,

முயற்சி செய்தால் எதுவும் முடியும்,

வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்!
வாழ்க வளமுடன்!"

என்பதை இரவு தூங்கும் முன்பும், காலை எழுந்தவுடனும் 1 வருடம் தொடர்ந்து சொன்னால்.... வாழ்வில் வெற்றி நிச்சயமாம்!!!

இதை முயற்சி செய்து , உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!!


திங்கள், 10 ஜனவரி, 2011

உழவர் திருநாள் - உதவி திருநாள்

ஏழை விவசாய குடும்பங்கள் உழவர் திருநாள் கொண்டாடிட...
நாம், ஆளுக்கோர் ஏழை விவசாய குடும்பத்தை தத்தேடுத்தால் என்ன??

உங்கள் கருத்து.. ??

விவசாயிகளுக்கென்று இயங்கும் நிறுவனங்கள் இதனை செய்கின்றனவா??
விவசாயிகளை நேரடியாக சென்றடையும் தளங்கள் ??

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!


ஆனந்த விகடனில் வெளியான .... நாஞ்சில் நாடன் பேட்டியின் ஒரு பகுதி....


''சினிமா மட்டும்தான் தமிழ் கலாசாரத்துக்கு அபாயமானதா என்ன?''
''கலாசாரம் என்பது எப்போதும் நிலையான ஒன்று இல்லை. அது மாறிக்கொண்டே இருப்பது. ஆனால், மரபைக் கணக்கில் எடுக்காத கலாசார மாற்றம் பாழ். அற மதிப்பீடுகளும் ஒழுக்க விழுமியங்களும்தான் ஒரு பண்பாட்டின் வேர்கள். தமிழ் சினிமாதான் தமிழ் சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. தமிழ் சமூகம் அளவுக்குச் சினிமாவின் கேடுகளை உள்வாங்கிக்கொண்ட சமூகம் வேறு எதுவும் கிடையாது. அதுபோக, அரசியலும் ஊடகமும் கல்வியும் நம் சமூகத்தை நாசம் செய்துகொண்டு இருக்கின்றன. கறிக்கோழியை வளர்ப்பதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெற்றோர்களிடம் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பிராய்லர் கோழியை வளர்ப்பதைப்போல பிள்ளைகளை வளர்த்தால், அந்தச் சமூகம் எப்படி உருப்படும்? படிப்பு, வேலை இதைத் தவிர, மனித வாழ்க்கைக்கு அர்த்தங்களே இல்லையா? குறிக் கோள்களே இல்லையா? நமது சமூகம் எப்படி மதிப்பீடுகளை இழந்துகிடக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் எனக்கு பி.எஸ்.என்.எல்லில் இருந்து ஒருதொலை பேசி அழைப்பு. எடுத்துப் பேசினால், 'ஹாய், மச்சான் சௌக்கியமா?’ என்றது. அது ஒரு பதிவு செய்யப்பட்ட குரல். எதிர்முனையில் இருப்பவர் யார்?  எழுத்தாளரா, கொலைகாரரா, ஆசிரியரா, நோய்வாய்ப்பட்டவரா, அவருக்கு என்ன வயது இருக்கும் என்று எந்தக் குறைந்த பட்ச அறிவும் இல்லாமல் கூவுகிற வியாபாரக் குரல்கள் என்னை இம்சை செய்கின்றன!''

''இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே?''

''உண்மைதான். தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம். ஆனால், இப்போது உள்ள மாணவர்களோ, 'மானாட மயிலாட’ பார்ப்பதற்குச் செலவழிக்கும் மணித் துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு, இன்று எந்தத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதிகூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள். நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?
இன்று ஸ்பெக்ட்ரமில்  1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம். ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன்.

எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

கடைசி கடிதம் எப்போது??

என் தாய் தந்தைக்கு... கைப்பட எழுதிய சில வரிகள்..  
வாழ்வில் முதல் முறை புத்தாண்டு வாழ்த்தின் அர்த்தம் உணர்ந்தேன்...

நீங்கள் கடைசி முறை கைப்பட கடிதம் எழுதியது எப்போது??